புதன், 7 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 9)





வழக்கமான கேலி கிண்டல்கள் நடந்தேறின. மாப்பிள்ளையைக் கண்டவுடன் மணப்பெண் வெட்கத்தில் நாணினாள். இரவு உணவு பரிமாறப்பட்டது. கரண் அண்ணா சித்தியை எனக்கு ஊட்டிவிடச் சொன்னார். எவ்வளவோ மறுத்தும் என்னை அவர்கள் விடவில்லை. மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சித்தி எனக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். நான் அமதியாக உண்டு முடித்து அவ்விடம் அமர்ந்திருந்தேன். அவர்கள் அன்பு எமது உள்ளத்தை வெகுவாக நெகிழ்த்தியது. மாப்பிள்ளை தனது நண்பர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவர கிளம்பிச் சென்றார். அவரது தாயார் மற்றும் இன்னும் சில உறவினர்கள் மணப்பெண்ணின் வீட்டிலேயே காத்திருந்தனர்.

நேரம் ஆக ஆக, மாப்பிள்ளையின் தாயாருக்குக் கால் வீங்கி வலி எடுத்தது. ஏற்கனவே ஒரு முறை கவிதா அவரது காலுக்குத் தைலம் தேய்த்து உருவி விடுவதைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவளது கைகளில் மருதாணி. மாமியார் கால் வலியால் துடிக்க அவள் ஏதும் செய்ய இயலாமல் பரிதாபமாகப் பார்த்தாள். அப்போது கவிதாவின் அம்மா சிறிய புட்டி தைலத்துடன் மாப்பிள்ளையின் அம்மாவின் கால்களை உருவிவிட வந்தார். பெரியர்வர்களுக்கு ஏன் இந்த வேலை என நானே வலியச் சென்று, “நான் போட்டு விடுகிறேன்,” என தைலத்தை வாங்கிக் கொண்டேன்.

முன் பின் தெரியாத பெண் என்பதால் மாப்பிள்ளையின் அம்மா சற்று தயங்கினார். “உனக்கேனம்மா இந்த வீண் வேலை. பரவாயில்லை,” என தடுத்தார். “பரவாயில்லையம்மா… நான் தைலம் தேய்த்து விடுகிறேன். நீங்களும் அம்மா மாதிரி தானே?” என சொன்னவுடன் அவர் வேறு வழியின்றி கால்களை நீட்டினார்.
நானும் தைலம் தேய்த்து அவரது கால்களை உருவ ஆரம்பித்தேன். “உருவுவதற்கு எங்கேயாவது படிச்சியாம்மா?” என நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் வினவினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக்கொண்டே “இல்லையம்மா,” என்றேன்.

“யாரு பெத்த பிள்ளையோ… முன்பின் தெரியாது. என் காலை பிடிச்சு உருவி விடுறே. நீ நல்லா இருப்பேம்மா,” என அந்தத் தாய் ஆசீர்வதித்தது மனதைக் குளிரச் செய்தது. நள்ளிரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு நித்திரை வர ஆரம்பித்தது. உறவினர்களும் மாப்பிள்ள வீட்டாரும் இன்னமும் மணப்பெண் வீட்டில் இருந்ததால் நான் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்த நீண்ட மெத்தை நாற்காலியில் சுருண்டுப் படுத்துக் கொண்டேன். சித்தி, மேனகா, கரண் அண்ணா ஆகியோர் மேலே வந்த பொழுது சில தடவை என்னை எழுப்ப முயற்சி செய்தனர். அசதியில் உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தன.

பின்னிரவு மணி 2 அளவில் நானாகவே விழித்துக் கொண்டேன். படுக்கை அறைக்குச் சென்று வசதியாகப் படுத்துக் கொண்டேன். குளிக்காமல் படுத்ததால் அதன் பிறகு நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதிகாலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்துவிட்டு திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக சிறிய அட்டைப் பெட்டிகளை மடிக்க ஆரம்பித்தேன். இன்று தீபாவளி. ‘கெளரி காப்பு’ கட்டுவாதற்காக வீட்டுப் பெண்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். இவற்றில் எமக்கு நம்பிக்கை குறைவு என்பதனால் நான் வீட்டிலேயே இருந்து பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தம்பிகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் வாடகைக் காருக்கு அழைத்தேன். வேலையாக இருப்பதால் மதியம் 12 மணிக்கே வர முடியும் என்றார். தோழர் அருண்ஷோரியை அழைத்து தம்பிகள் இருவரையும் பாரிசுக்குப் பேருந்தில் அல்லது ஆட்டோவில் அழைத்துச் செல்லுமாறு வேண்டினேன். அவர்களும் பாரிசுக்குச் சென்று மதியம் 12 மணிக்குள் தங்கும் விடுதிக்குத் திரும்பி விட்டனர். வாடகைக் கார் வந்தப் பிறகு நானும் அவ்விடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு கடைத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தோம். அவ்விடத்தில் இறுதியாக வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் தேடித்தேடி வாங்கிக் கொண்டோம்.

தேவாவின் வெள்ளைக் காலணியில் யாரோ வெத்தலைப் போட்டு சிவப்பு நிறத்தில் துப்பி வைத்திருந்தனர். அதனை அவனிடம் காட்டி கேட்ட போதுதான் அவன் அதனை கவனித்திருந்தான். “யார் செஞ்சா’னே தெரியல,” என புலம்ப ஆரம்பித்துவிட்டான். அதற்குப் பிறகு அவன் புலம்பிக் கொண்டே தான் வந்துக்கொண்டிருந்தான். எனக்கும் தினேசுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. தேவா புலம்பிக்கொண்டிருக்க நாங்கள் அவனது சேட்டைகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்க அதற்குள் செழியன் அண்ணா நான்கைந்து முறை எனது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். தீபாவளியன்று அவரது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்திருந்தேன். மதியம் 3 மணியளவில் செழியன் அண்ணாவின் வீட்டை அடைந்தோம். அங்கே அண்ணாவின் நண்பர் நிருவும் இருந்தார். நிரு காலையிலேயே வந்துவிட்டதாக அண்ணா தெரியப்படுத்தினார். அண்ணி எங்களுக்காக வகை வகையாகச் சமைத்து வைத்திருந்தார். சமையல் உண்மையிலேயே பிரமாதமாக இருந்தது. நான் மட்டுமின்றி எனது தம்பிகளும் அதனை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டனர். 

சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் வரவேற்பறையில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அவ்விடம் அண்ணாவின் தோழி ஒருத்தியும் அமர்ந்திருந்தாள். அவள் மலேசியத் தமிழ்ப்பெண். சென்னையில் பல் மருத்துவம் படித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். ஏனோ அவள் என்னிடம் தமிழில் பேசவில்லை. அவளுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்து நானும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தேன். போகும் வழியில் அவளது கல்லூரியில் இறக்கிவிடுமாறு செழியன் அண்ணா கேட்டுக்கொண்டார். அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு வளசரவாக்கம் சென்றோம். ஏனெனில், நாளை கவிதாவின் திருமணம் என்பதால் இன்று விருந்தினர் வீட்டில் தங்குமாறு பாக்கியா அக்காவும் கவிதாவும் ஏற்கனவே கேட்டுக்கொண்டனர்.

வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இறக்கி வைத்த பிறகு கோடம்பாக்கத்திற்குச் சென்றோம். கீரா அண்ணாவிற்கு உடல் நலமில்லை என்பதாலும், தம்பிகளை அவர் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் அவர்களையும் அழைத்துக்கொண்டு அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். தம்பி விமான நிலையத்திலிருந்து வாங்கி வந்திருந்த ‘சிவாஸ்’ மதுபானத்தையும் மறவாமல் உடன் கொண்டுச் சென்றோம். அண்ணாவும் அவரது திரைப்படக் குழுவினர் சிலரும் அலுவலகத்தில்தான் இருந்தனர். வாடகைக் காருக்கான பணத்தை செலுத்தி அனுப்பி வைத்த பிறகு அலுவலகத்தில் அனைவரும் குழுமி உரையாடினோம்.

“அண்ணனுக்கு மருந்துக் கொண்டாந்திருக்கியா கண்ணு?” என அண்ணா சிரித்துக்கொண்டே மது பாட்டிலை வாங்கிக்கொண்டார். பின்னர் அனைவரும் மது அருந்தத் தொடங்கினர். பாடல் கச்சேரியும் அங்கே அரங்கேறியது. நான், அருண்ஷோரி மற்றும் தம்பிகள் இருவர் மட்டும் அவர்கள் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னர் சில சூடான விவாதங்களும் நடந்தேறின. கீரா அண்ணா அரசியல், சாதியம் பற்றிப் பேசத் தொடங்கினார். எனது தம்பிகள் இருவரும் திருதிருவென முழித்தனர். போதையில் அவரது பேச்சு சமுதாய, போராட்ட விடயங்களைப் பற்றி ஆழமாகப் போக நான் குறுக்கிட்டு, “அண்ணா, தம்பிகளுக்கு இது பற்றியெல்லாம் தெரியாது. வேறு ஏதாவது பேசுங்கள்,” என அவர் காதருகில் கிசுகிசுத்தேன்.

“சொல்லிக்கொடும்மா! தெரியாதுன்னு விடக்கூடாது. எல்லாரும் போராடனும். உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? அவனுங்களுக்கும் சொல்லிக்கொடு,” என அவர் உணர்ச்சிவசப்பட்டார். அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. “அண்ணா, தயவுசெய்து வேண்டாம்,” என மீண்டும் வலியுறுத்தினேன். அவர் என் முகத்தைப் பார்த்தார். “சரிம்மா” என ஏமாற்றத்தோடு கூறினார். நாங்கள் இன்னும் இரவு உணவு சாப்பிடவில்லை.

சரி அனைவரும் சாப்பிட போகலாம் என கிளப்பினோம். உணவகத்திற்குச் சென்ற பிறகு கீரா அண்ணா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார். வாசனும் செல்ல வேண்டும் என்றார். சரியென்று பொழிலன், அருண்ஷோரி, நான் மற்றும் தம்பிகள் மட்டும் இரவு உணவு உட்கொண்டோம். வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வேளையில் எங்களிடம் இரு மோட்டார் வண்டிகள் மட்டுமே இருந்தன. நாங்களோ 5 பேர். நான் அருண்ஷோரியின் மோட்டாரில் ஏறிக்கொள்ள, இரு தம்பிகளும் பொழிலன் வண்டியில் ஏறிக்கொண்டனர். என் தம்பிகளுக்கு இது புது அனுபவமாக இருந்தது. இடம் போதாமையாலும், சீரற்ற பாதைகளாலும், அந்தப் பயணம் அனுபவ பயணமாக அமைந்தது. அவர்களைப் பார்க்க எனக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஒருவழியாக அனைவரும் வளசரவாக்கம் வந்துச் சேர்ந்தோம்.


கருத்துகள் இல்லை: