செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 8)





கீரா அண்ணாவின் அலுவலகத்தில் இணைய இணைப்பு இருந்தது. எனவே, எனது மின்னஞ்சல் மற்றும் முகநூல் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டேன். அருண்ஷோரியுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

கவிதாவின் வீட்டில் அனைவரும் விழித்திருந்தனர். திருமண முன்னேற்பாடுகள் வெகுவாக நடந்துக்கொண்டிருந்தன. மிகவும் சோர்வாக இருந்ததால் குளித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன். பெரிய சித்தி (கவிதாவின் சித்தி) தட்டு நிறைய புட்டும் குழம்பும் ஊற்றி எடுத்து வந்து கைகளில் திணித்தார். “வேண்டாம் சித்தி, பசியில்லை,” என்றேன். “நாள் முழுக்கச் சாப்பிடாமல் பட்டினி கிடந்துட்டு வெறும் வயித்தோட நித்திரைக்கொள்ள கூடாது. என்ன பழக்கமிது? கொஞ்சம் சாப்பிட்டு படும்மா,” என செல்லமாய் கடிந்துக் கொண்டார்.

அவரின் அன்புக் கட்டளையை எம்மால் மீற முடியவில்லை. இருந்த போதிலும் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் வயிறு முழுவதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. “முடியலைனா வச்சுடம்மா,” என பெரிய சித்தி எமது சங்கடத்தைப் புரிந்துக்கொண்டார். உணவை முடிக்காமல் பாதியிலேயே கொட்டுவது எமக்கு வருத்தத்தை அளித்தது. இருந்த போதிலும் எம்மால் அதனை உண்ணவும் முடியவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மீதமிருந்த உணவைக் குப்பையில் எறிந்துவிட்டு தட்டினைக் கழுவி வைத்தேன்.

கவிதா, பாக்கியா, மேனகா மற்றும் கவிதாவின் உறவுக்காரப் பெண்கள் இருவர் அறையில் பேசிக்கொண்டே திருமண வேலைகளில் இலயித்திருந்தனர். நானும் திருமண விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த அணிச்சல்களை (கேக்) அட்டைப் பெட்டிக்குள் போடத் தொடங்கினேன். “பிள்ளை ரொம்பெ களைச்சி போயிருக்கா… போயி நித்திரைக் கொள்ளம்மா,” என பாக்கியா அக்கா பரிவோடு கூறினார். 

அப்போதுதான் நாளை எனது தம்பிகள் சென்னை வரப்போவது எனக்கு நினைவு வந்தது. நாளை காலை 7.30-க்கு விமான நிலையம் சென்று அவர்களைக் கூட்டி வரவேண்டும் என அக்காவிற்கு நினைவுப்படுத்திவிட்டு அப்படியே படுத்துறங்கிவிட்டேன். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் இந்தோனேசியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்த அத்தை கைப்பேசியின் மூலம் அழைத்துவிட்டார். தம்பிகள் வந்து சேர்ந்தவுடன் தமக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு நினைவுறுத்தினார்.

அதிக களைப்பாக இருந்ததால் எம்மால் சீக்கிரம் எழ முடியவில்லை. எமது மெத்தையும் தலையணையும் ‘என்னை விட்டு விலகாதே,’ என கதறியழுவது போல் இருந்ததால் பிரிய மனமில்லாமல் சற்று நேரம் கழித்துதான் எழும்பினேன். நான் எழும்பும் போது சின்னவன் அண்ணா வரவேற்பரையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். “நேரமாகிடிச்சு…இப்ப வெளிக்கிட்டுப் போனாதான் நேரத்துல போய் சேர முடியும்,” என அவசரப்படுத்தினார்.

பாவம் தம்பி. இதற்கு முன்பு அவன் சென்னைக்கு வந்ததில்லையே. நேரத்திற்கு சென்று அவனை அழைத்து வர வேண்டும். தனியாக விடக் கூடாது என குளிக்காமலேயே, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வண்டியில் ஏறினேன். 7.30 மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தாயிற்று. விமானம் சற்று தாமதமாகத்தான் வந்திறங்கியது. விமான நிலையச் சடங்குகளை முடித்துக் கொண்டு தம்பிகள் தேவா மற்றும் தினேஷ் இருவரும் வெளியே வரும் போது காலை மணி 8.45 ஆகிவிட்டது.

தம்பிகளை அழைத்துக்கொண்டு நேரே தங்கும் விடுதிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், கவிதா அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லியிருந்ததால் நேரே வீட்டிற்குச் சென்றோம். திருமண வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் கூட அவர்கள் விருந்தினர்களைக் கவனிக்கத் தவறவில்லை. தம்பிகள் இன்று சென்னையில் இருந்துவிட்டு நாளை பெங்களூர் புறப்படுவதாகத்தான் எண்ணியிருந்தார்கள். கவிதா தனது திருமணம் முடியும் வரையில் சென்னையில் இருக்குமாறு அவர்களை வற்புறுத்தியதால் அவர்களாலும் அவளது அன்பு வேண்டுதலை மீற முடியவில்லை.

சித்தி இடியாப்பம் பறிமாற தம்பிகள் இருவரும் உண்டு முடித்தனர். அதற்குள் நான் குளித்து ஆயத்தமானேன். “அக்கா பீஹூன் (நூடுல்ஸ் வகையைச் சார்ந்தது உணவு) நன்றாக இருந்தது. ஆனால் ஏன் அதில் குழம்பு ஊற்றிச் சாப்பிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை,” என தேவா சொன்னவுடன் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “டேய், அது பீஹூன் இல்லை. இடியாப்பம்!” என்றேன். “இடியாப்பம் வெள்ளை நிறத்தில் தானே இருக்கும். இங்கு சாக்லெட் நிறத்தில் இருக்கிறதே,?” என அசடு வழியக் கேட்டான்.

அன்று தி-நகரில் சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. தம்பிகள் இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்பினர். மழை காலமாக வேறு இருந்தது. திருமண வீட்டில் அனைவரும் வேலையாக இருந்ததால் அவர்களைத் தொந்தரவு செய்ய மனமில்லை. பாக்கியா அக்காவிடம் சொல்லி வாடகை வண்டி ஒன்று பேசச் சொன்னேன். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே வண்டி வந்துச் சேர்ந்தது. வாடகை வண்டி ஓட்டுனரும் ஈழத்தமிழர்தான்.
காலை 11.30 அளவில் தி-நகருக்குச் சென்றோம். சின்னவன் அண்ணா சொன்ன தங்கும் விடுதியில் சென்று பைகளை வைத்து விட்டு சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்கத் தொடங்கினோம். 7 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான பேரங்காடி! அதனை முழுதாக சுற்றிப் பார்க்கவே ஒருநாள் போதாது போலும். சுற்றி சுற்று வயிற்றில் பசி எடுக்க ஆரம்பித்தது. பேரங்காடிக்கு புன்புறம் இருந்த ‘தலப்பாக்கட்டு பிரியாணி’ கடைக்குள் நுழைந்தோம்.

அப்போதுதான் வண்டி ஓட்டுநர் இன்னும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது. அவரது கைப்பேசி எண்கள் இருந்ததால் அவரைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இருக்கும் உணவகத்திற்கு வரச் சொன்னோம். முதலில் மறுத்த அவர் எங்களின் வற்புறுத்தலின் பேரில் வந்துச் சேர்ந்தார். உண்டு முடித்த பின்னர், தம்பிகளை அங்கேயே விட்டுவிட்டு நான் கோயம்பேடு சென்றேன். கீரா அண்ணா இன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபடுகிறார். அவரைச் சென்று காண வேண்டும். அண்ணாவின் முகம் வாடியிருந்தது. சிறிது நேரம் அவருடன் கதைத்துக் கொண்டிருக்கையில் தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார்.

அருண்ஷோரியிடம் தம்பிகள் தங்கியிருக்கும் இடத்தையும் அவர்களையும் பற்றிச் சொல்லிவிட்டு, நேரம் இருப்பின் அவர்களைச் சென்று காணுமாறு வேண்டிக்கொண்டேன். அவரும் செல்வதாக உறுதியளித்தார். அன்றைய தின போராட்டம் நிறைவுற்ற வேளையில் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்களையும் குறுந்தட்டுகளையும் வாங்கிக் கொண்டேன். தலைவர் பிரபாகரன் படம் போட்ட சாவி சங்கிலிகள் (கீ செயின்) சிலவற்றையும் மலேசியாவில் உள்ள நண்பர்களுக்காக வாங்கிக் கொண்டேன்.

கனத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது. வாடகை வண்டி ஓட்டுநர் எமக்காகக் காத்திருந்ததால் அதிக நேரம் அங்கிருந்தவர்களுடன் எம்மால் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. கவிதாவிடம் இன்று சீக்கிரமே வந்து விடுவதாக உறுதியளித்திருந்தேன். இன்று மாலை பெண்ணுக்கு மருதாணியிடும் நிகழ்வு இருக்கிறது. நேரத்தில் சென்றாக வேண்டும். அடை மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வண்டிகள் எல்லாம் படகுகள் போல் நீரில் செல்ல வேண்டிய நிலையாயிற்று.

மாலை 6 மணிக்கெல்லாம் வீடு வந்துச் சேர்ந்துவிட்டேன். மணப்பெண் இன்னும் தயாராகவில்லை. அவளை அலங்கரிக்கும் பொறுப்பு எம்மிடம் வந்தது. இன்று நமது கைவண்ணத்தைக் காட்டிவிடலாம் என அவளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினேன். என்னை என்னாலேயே நம்பமுடியவில்லை. அலங்காரம் செய்து அவள் ஒரு தேவதை போல் காட்சியளித்தாள். திருமண கலை அவள் முகத்தில் பிரகாசித்தது.

நேரம் குறைவாக இருந்ததால் எம்மால் குளித்து அலங்காரம் செய்ய முடியவில்லை. பரவாயில்லை, இன்று மணப்பெண் நானில்லையே என அதனை நான் பொருட்படுத்தவும் இல்லை. மணப்பெண்ணின் வேண்டுதலுக்கு ஏற்ப பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்துக் கொண்டேன். மருதாணியிடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறு குழந்தைகளும், வயதுப் பெண்களும், திருமணமான மாதுகளும் தங்கள் கைகளில் மருதாணியிட்டு அழகு பார்த்தனர். பச்சை மருதாணியின் மணம் வீடெங்கிலும் பரவிக் கிடந்தது. சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துச் சேர்ந்தனர்.

கருத்துகள் இல்லை: