வியாழன், 15 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (5)


கவிதாவின் பாட்டி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ‘கப்சிப்’பென்று அமைதியானார்கள். கவிதா சென்று கதவைத் திறந்தாள்.

“பேசிக்கிட்டு இருக்கீங்களா? தண்ணி கலக்கிறேன். வந்து குடுச்சிட்டுப் பேசுங்க,” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். பாட்டி கலக்கிக் கொடுத்த தண்ணியைக் குடித்துவிட்டு, இன்னும் சிறிது நேரம் கதையடித்து விட்டு தேவி வீடு சென்றுவிட்டாள்.

கவிதாவிற்கு நாட்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்துச் செல்வது போல் தோன்றியது. அடுத்த வாரத்தை எதிர்ப்பார்த்து ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதும் தேவியுடன் கதையளப்பதுமாக அந்த ஒரு வாரத்தை எப்படியோ முடித்து விட்டாள். அவள் எதிர்ப்பார்த்திருந்த நாளும் வந்தது. கவிதா உற்சாகமானாள். பள்ளி முடிந்ததும் தேவியிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு நேரே கணினி மையத்திற்குச் சென்றாள். உரையாடல் பெட்டியைத் திறந்த போது அவளுக்கு முன்னமே நவநீதன் அங்கிருப்பதைக் கண்டாள்.

“ஹாய் கவிதா!”

“ஹாய்!”

“சாப்பிட்டீங்களா?”

“இன்னும் இல்லை. இனிமேலதான் சாப்பிடணும். நீங்க?”

“நான் சாப்பிட்டேன். சரி, இன்னிக்கு என்ன பேசலாம்?”

“உங்களைப் பத்தி சொல்லுங்களேன்.”

“என்னைப் பத்தியா? என்னோட முழுப்பெயர் நவநீதன். வயசு 17. பெர்லிஸ்’ல இருக்கேன். இன்னும் என்ன தெரிஞ்சுக்கணும்?”

“உங்க பேமிலி பத்திச் சொல்லுங்களேன்.”

“எனக்கு ஒரு தம்பி, பேரு நவனேஸ்வரன். அம்மா பேரு நவமணி. அப்பா பேரு நவக்குமார்.”

“அப்படியா? எல்லார் பேரும் ‘நவா’னு ஆரம்பிக்குது.”

“ஆமாம். உங்கள பத்தி சொல்லுங்களேன்.”

“என்னோடப் பெயர் கவிதா. அப்பா பேரு சுப்பிரமணியம். அம்மா பேரு கலாராணி. எனக்கு ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க.”

“அப்படியா? வீட்ல அம்மா அப்பா எல்லாம் செளக்கியமா?”

“தெரியல…”

“என்ன?”

“நான் பாட்டி தாத்தா வீட்ல இருக்கேன்.”

“அப்படியா? ஏன் அம்மா அப்பா கூட இல்ல?”

“அம்மா அப்பா பிரிஞ்சுட்டாங்க. சின்ன வயசிலேர்ந்து நானும் அண்ணன்களும் பாட்டி தாத்தா வீட்லதான் இருக்கோம்.”

“ஐ’ம் சாரி. எதனால பிரிஞ்சாங்க?”

“எனக்குத் தெரியாது. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும் போதே பிரிஞ்சுட்டாங்க.”

“ஐஞ்சு வயசுலேர்ந்துப் பாட்டி தாத்தா வீட்லதான் இருக்கீங்களா? அண்ண ரெண்டு பேரும் என்னப் பண்றாங்க?”

“ஆமாம். ரெண்டு அண்ணனும் படிச்சு முடிச்சிட்டாங்க. சுங்கை சிப்புட்’ல வேலை செய்யிறாங்க.”

“அப்படியா?”

“ஆமாம். வேறு ஏதாவது பேசலாமா?”

“மன்னிச்சிருங்க. உங்க மனசைக் கஷ்டப்படுத்திட்டேனா?”

“நோ, நோ! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நாம வேற எதைப் பத்தியாவது பேசலாமே.”

“சரி, உங்களுக்கு என்ன பிடிக்கும்?’

“என்ன பிடிக்கும்’னா?”

“உங்க ஹாபி என்ன?”

“படிப்பது, எழுதுவது, ஊர் சுற்றுவது, கதையடிப்பது, மூட் இருந்துச்சுன்னா டான்ஸ் ஆடுவது.”

“நல்லது.”

“உங்க ஹாபி என்ன?”

“ஜங்கல் டிராக்கிங் பிடிக்கும். அடிக்கடி பேட்மிந்தன் விளையாடுவேன். பூட்பால் பைத்தியம்.”

“நானும் சம் தைம்ஸ் பேட்மிந்தன் விளையாடுவேன்…” இவ்வாறாக இவர்களது உரையாடல் நீண்டுக்கொண்டே சென்றது. நேரமாகியது, கவிதா வீடு திரும்பினாள்.

இப்பொழுதெல்லாம் வாரம் இரு முறை கவிதா கணினி மையத்திற்குச் செல்கிறாள். நவநீதனுடன் சாட்டிங் செய்யும் நாட்களில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறாள். இப்புதிய தோழமை அவளுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கிறது. இப்படியே நாட்கள் வாரங்களாயின; வாரங்கள் மாதங்களாயின. பள்ளி விடுமுறையும் வந்தது…

தொடரும்…

3 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பள்ளி விடுமுறையும் வந்தது…\\

வழமை போல அருமை ...

புதியவன் சொன்னது…

//“பேசிக்கிட்டு இருக்கீங்களா? தண்ணி கலக்கிறேன். வந்து குடுச்சிட்டுப் பேசுங்க,” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். பாட்டி கலக்கிக் கொடுத்த தண்ணியைக் குடித்துவிட்டு, இன்னும் சிறிது நேரம் கதையடித்து விட்டு தேவி வீடு சென்றுவிட்டாள்.//

சிங்கை, மலேசிய தமிழ் ‘தண்ணி’ என்றால் டீ, கஃபி போன்றவை மற்ற ஊர்களில் பல அர்த்தங்களில் சொல்லப்படும்...

து. பவனேஸ்வரி மலேசியாவில் பிறந்திருந்தால் அதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

கதை நன்றாக செல்கிறது...தொடருங்கள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி.

புதியவன் அவர்களின் கருத்துக்கும் நன்றி. மலேசிய சூழலில் கதை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே 'தண்ணி' என்ற சொல்லை உபயோகித்தேன். நீங்கள் கூறியதைப் போல், மலேசியாவில் 'தண்ணி' என்றால் டீ, காபி போன்றவற்றைக் குறிக்கும் என்பதனையும் இவ்விடம் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி.