வெள்ளி, 24 ஜூன், 2016

மரணம்


மரணம்...ஆம், அவ்வளவுதான் வாழ்க்கை. நாம் எவ்வளவுதான் இந்த வாழ்க்கையை எதிர்க்கொள்ள போராடினாலும்,இறுதியில் அனைவருக்குமே மரணம்தான். எவ்வளவோ கற்றுக்கொண்ட மனிதனால் இன்று வரையில் காலனை வெல்லும் வழியினைக் கண்டுக்கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மரணமே இல்லாதவர்கள் போல் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். எத்தனைப் பெருமை, கர்வம், பொறாமை, வஞ்சகம், போட்டி?? இறுதியில் நடப்பதென்ன? காலன் வெல்லும்போது நாம் நமது இயலாமையை உணர்கிறோம். 

நமது உடல் மிகவும் மென்மையானது. அதனை ஒவ்வொருவரும் பெரும்பாடுபட்டுக் காக்க வேண்டியுள்ளது. சிறு கீறலும் கூட நம் உயிரை பறித்துவிடும். தீயில் எளிதில் கருகி வெந்துவிடுவோம். சாலை விபத்தில், கணத்தில் மரணம் நிகழலாம். நாம் சக்தியற்றவர்கள். நாம் தினமும் உயிர் வாழ உண்ணும் உணவு கூட சில சமயங்களில் நமக்கு எமனாய் வந்து நின்றுவிடுகிறது. இவ்வளவுதான் மனிதன். பிற உயிர்களைப் போல் வெறும் இரத்தமும், எலும்பும், சதையும் கொண்டவன். ஆனால், மரணம் கண் முன் தெரியும்வரை மனிதன் இதனை உணர மறுக்கிறான்.

எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு அனுபவங்கள் பெற்றிருந்தும், நமது வாழ்க்கையின் முடிவு மரணம்; அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற உண்மையை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ சாகாவரம் பெற்றவர்கள் போல் கர்வத்துடன் பூமியில் அலைகிறோம். வாழ்க்கையை மேம்படுத்த, பணம் சம்பாதிக்க என்னென்னவோ செய்கிறோம். பெயரையும் புகழையும் தேடி ஓடுகிறோம். பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம். அடுத்தவரைக் கண்டு நகைக்கிறோம்; ஏளனம் செய்கிறோம். பிறர் மரணத்தைக் கண்டு பரிதாபம் கொள்கிறோம். நாமும் எதிர்க்காலப் பிணம் என்பதை உணர மறுக்கிறோம்.

மரணம், இதுதான் வாழ்க்கையின் முடிவு. பிறந்த ஒவ்வொருவருக்கும் இதுதான் முடிவு. இதில் எள்ளளவும் மாற்றமில்லை. அது இப்போதும் நிகழலாம், எப்போதும் நிகழலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியைத்தான் நாம் வாழ்க்கை என்கிறோம். இந்த இடைவெளி சிலருக்குக் குறுகியதாய் இருக்கலாம், பலருக்கும் நீண்டதாய் இருக்கலாம். எப்படி இருப்பிலும், இடைவெளி நீங்கியப்பின் நமக்கெல்லாம் காத்திருப்பது மரணம்! ஆம், எனக்கும் மரணமுண்டு, உனக்கும் மரணமுண்டு!


வெள்ளி, 27 மே, 2016

நிரந்தரமில்லை...


இதுவும் நிரந்தரமில்லை 
அதுவும் நிரந்தரமில்லை 
சுற்றும் உலகில்
எதுவும் நிரந்தரமில்லை!

நேற்று அழுதவன் 
இன்று சிரிக்கிறான்
இன்று சிரிப்பவன்
நாளை அழுகலாம்...

மாடியில் இருப்பவன் 
குடிசைக்கு வரலாம்
குடிசையில் இருப்பவன்
மாடி ஏறலாம்...

இன்றைய காதலி மனைவியாகலாம்
நேற்றைய நண்பன் பகைவ‌னாகலாம்
பெற்ற தாயும் மறைந்துப் போகலாம்
வாழ்க்கை என்பதே வெறுத்துப் போகலாம்

நேற்றைய பழக்கம் மாறி போகலாம்
புதியன அனைத்தும் வந்து சேரலாம்
நண்பர் கூட்டம் பெருகிப் போகலாம்
அடுத்த நாளே இறந்துப் போகலாம்!

இதுவும் இல்லை
அதுவும் இல்லை
வாழ்க்கையில் எதுவும்
நிரந்தரமில்லை!

ஹரி போட்டரும் மந்திரவாதியின் கல்லும் -ஜெ.கே.ரோவ்லிங் (Harry Potter and The Sorcerer's Stone)


பெற்றோர் மறைவிற்குப் பிறகு ஹரி சித்தியின் வீட்டில் பல கொடுமைக்களுக்கிடையில் வளர்கிறான். பதினோரு வயது வரையில் தனது பிறந்தநாளை ஒருநாள் கூட அவன் கொண்டாடியதில்லை. ஒருநாள் அவனுக்கு ஆந்தையின் மூலம் கடிதம் கொண்டு வரப்பட்டது. அவனது சித்தாப்பாவும் சித்தியும் அதனை அவனிடம் கொடுக்காது கிழித்துவிடுகின்றனர். சித்தியின் குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு உறவோ நட்போ இல்லாத நிலையில் அவன் அந்தக் கடிதம் யாருடையதாக இருக்கும் என நினைத்து ஏங்குகிறான். அவனது ஏக்கத்தைப் போக்க, கடிதங்கள் கிழிக்கப்பட இன்னும் பல கடிதங்கள் வந்த வண்ணமாகவே இருந்தன. 

ஹரியின் 11-வது பிறந்தநாளன்று ஹாக்ரிட் எனப்படும் பெரிய மனிதன் ஒருவன் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, ஹாரி ஒரு மந்திரவாதி என்ற உண்மையைச் சொல்கிறான். மேலும், மந்திரவாதிகளான ஹரியின் பெற்றோர் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் விவரிக்கிறான். ஹரியை ஹோக்வர்ட் எனப்படும் மந்திரம் பயிலும் பள்ளியில் சேர்ப்பதற்கே தான் அவ்விடம் வந்ததாகக் கூறி அழைப்புக் கடிதத்தை கொடுத்து ஹரியை அழைத்துச் செல்கிறான். 

ஹரியின் படிப்புச் செலவிற்கு அவனது பெற்றோர் அதிகமான செல்வத்தை வங்கியில் வைத்திருந்தனர். ஹாக்ரிட்டின் உதவியின் மூலம், வங்கிலியிருந்து பணத்தை எடுத்துப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறான். பொருட்கள் வாங்கும் சந்தையில் ஏறத்தாள அனைவருக்குமே ஹரியை நன்குத் தெரிந்தது. அவனது நெற்றியில் இருந்த மின்னல் வெட்டு போன்ற தழும்பு அவன் மரணத்தை வென்ற 'ஹரி போட்டர்' என்பதை உலகிற்குப் பறைச்சாற்றியது.

மாயத் தொடர்வண்டியில் ஏறி மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஹரிக்கு, ரோன் மற்றும் ஹெர்மியோனியின் நட்பு கிட்டுகிறது. பள்ளியிலும் மூவருக்கும் ஒரே குழுவில் இடம் கிடைத்ததால் பிற்காலத்தில் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாயப்பள்ளியின் அழகையும் ஆடம்பரத்தையும் கண்டு ஹரி மயங்குகிறான். அவனிடம் மற்ற சிறுவர்களைவிட ஏதோ ஒரு பெரிய சக்தி இருப்பதை அனைவரும் உணர்கின்றனர். ஹோக்வர்ட்டின் பிரபலமான பறக்கும் பந்து விளையாட்டுப் போட்டிலும் ஹரி கலந்துக்கொண்டு தன் குழுவிற்கு வெற்றித் தேடி தருகிறான். பள்ளியின் தலைமையாசிரியர் அல்புஸ் டம்பெல்டோர் மற்றும் ஹாக்ரிட் இருவரும் ஹரியிடம் மிகுந்த அன்புக் காட்டுகின்றனர். இருந்த போதிலும், பேராசிரியர் சினேப் அவனை விரோதியைப் போல் நடத்துகிறார். 

ஒரு சமயம் வங்கியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாட முயற்சி நடந்திருப்பதான செய்தி நாளிதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முந்தினம்தான்  தலைமையாசிரியரிடம் ஒப்படைப்பதற்காக ஹாக்ரிட் வங்கியிருந்து அதனை எடுத்து வந்திருந்தான். அது என்னப் பொருளாக இருக்கும் என அலசி ஆராய்ந்துக் கடைசியாக அது, மரணமில்லாமல் வைத்திருக்கும் மந்திரக் கல் என்பதை ஹரி தெரிந்துக்கொண்டான். அந்தக் கல்லைப் பெருவதற்கு சினேப்  முயன்றுக்கொண்டிருக்கிறான் என்றெண்ணி எப்படியாவது அந்தக் கொடியவனைத் தடுக்க வேண்டி தனது நண்பர்கள் ரோன் மற்றும் ஹெர்மியோனியின் உதவியுடன் செயல்படுகிறான். 

பலத் தடைகளைத் தாண்டி, இறுதியாக மந்திரக்கல் இருக்கும் இடத்தை அடைந்த ஹரி, பேராசிரியர் கியூரல் என்பவரே அந்தக் கல்லைப் பெருவதற்கு முயற்சிகள் செய்துவந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறான். தன் பெற்றோரைக் கொன்ற வொல்டெமோர்ட் என்ற தீயச்சூனியக்காரனுக்கு கியூரல் உதவி வந்துள்ளதை அறிந்து அந்தக்கல்லை அவனிடமிருந்துக் காப்பாற்ற முயல்கிறான். மாயக்கண்ணாடியின் உதவியால் கல் ஹரியின் காற்சட்டைப்பைக்குள் வருகிறது. கியூரலால் ஹரியைத் தடுக்க முடியவில்லை. ஹரியிடமிருந்த  மாயச்சக்தி கியூரலைத் தடுத்தது. பள்ளி முதல்வர் டம்பெல்டோர் தக்க சமயத்தில் வந்து ஹரியைக் காப்பாற்றுகிறார். அந்தக் கல் மேலும் துன்பங்களை விளைவிக்காமல் இருப்பதற்கு அதனை அழிக்கவும் செய்கிறார். 

இவ்வாறாக, ஹரி போட்டரும் மந்திரக்கல்லும் என்ற இந்தப்பாகம் நிறைவடைகிறது. மாயஜாலங்கள் நிறைந்த இக்கதை வாசிக்க மென்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இக்கதைத் திரைப்படமாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களையும் அற்புதங்களையும் எம்மால் இவ்விடம் பதிய முடியவில்லை. வாய்ப்பிருப்பின், நீங்களே படித்து ஹரி போட்டரின் மாய உலகில் வலம் வாருங்கள். 

வியாழன், 19 மே, 2016

பாவப்பட்டப் பெண் -ஜாக்கி கோலின்ஸ் Poor Little Bitch Girl -Jackie Collins



டென்வர் ஜோன்ஸ், அனபெல்லா, கரோலின் ஆகிய மூவரும் பெவெர்லி ஹில்சில் ஒன்றாகப் படித்தவர்கள். 

அனபெல்லா
பிரபலமான சினிமா நடிகர்களின் ஒரே மகள். பால்ய வயதிலேயே அழகினைக் கூட்டுவதற்காகப் பல அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவள். அழகியாக இருந்த போதிலும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமையால் செல்வத்தை தன் விருப்பப்படி செலவழிக்கிறாள். நியூ யார்க்கில் ஆடை வடிவமைப்புத் துறையில் தனக்கென தனி அடையாளத்தைத் தேடுவதற்காகப் புறப்படுகிறாள். சென்ற இடத்தில் போதைப் பித்தனான பிராங்கியுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் விரைவான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தைக் கையிலெடுக்கின்றனர். மிகவும் பிரபலமான பணக்காரர்களுக்கு உயர்தர நடிகைகள், அழகிகளைத் தயார் செய்து கொடுப்பது இவர்களது இரகசியத் தொழிலாக இருந்தது. இதற்கிடையில் அனபெல்லாவின் அழகிய தாயார் சொந்த வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார். அதே சமயம், இவளது இரகசிய தொழில் பத்திரிக்கைகளில் ஆதாரத்தோடு அம்பலத்திற்கு வருகிறது. இறுதியாக, பிராங்கியை விட்டுப் பிரிகிறாள்.

கரோலின்
வாசிங்டனின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிரேகரியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு கர்ப்பமாகிறாள். தனது காதலனைக் கலட்டிவிட்டு ஆட்சிக்குழு உறுப்பினரைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள். ஏற்கனவே திருமணமான கிரேகரி அதனது குடும்பத்தை விட்டுப்பிரிய விரும்பவில்லை. இதற்கெல்லாம் கரோலினின் கர்ப்பம்தான் காரணம் என எண்ணிய அவன் ஆட்களை வைத்து அவளைக் கடத்து கர்ப்பத்தை கலைக்க முயல்கிறான். பல இன்னல்களுக்குப் பிறகு எப்படியோ உயிர்த்தப்பிய கரோலினை டென்வர் காப்பாற்றுகிறாள். கிரேகரியின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த கரோலின், அவனை விட்டு நீங்கி தனது சொந்த ஊருக்கே செல்கிறாள். 

டென்வர் ஜோன்ஸ்
சிறுவயதிலேயே நன்றாகப் படித்து சட்டதாரியாக உருவெடுக்கிறாள். அனெபெல்லாவின் தாயாரின் திடீர் கொலை அவளை ஊரெங்கும் அலைய வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே தனது நீண்டநாள் காதலனால் கைவிடப்பட்ட டென்வர் மனதை ஒருநிலைப் படுத்தி தனது வேலையிலேயே குறியாக இருக்கிறாள். அப்பொழுதுதான் பள்ளியில் தான் விரும்பிய பணக்காரப் பையனான போப்பியைச் சந்திக்கிறாள். பலப் பெண்களுடன் பழகி சலிப்புற்ற போப்பி அனெபெல்லாவின் இயற்கையான நற்குணத்தில் தனது மனதைப் பறிக்கொடுக்கிறான். இறுதியாக இருவம் காதல் வயப்படுகின்றனர்.


முடிவுரை
ஹாலிவுட்டில் இளையோர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களிடையே நிலவும் சீர்க்கேடுகளையும் இந்நாவலின் வழி அறிந்துக்கொள்ள முடிகிறது. 



செவ்வாய், 29 மார்ச், 2016

நான் பன்முகம் கொண்டவள்!



அன்பொழுகும் ஒரு முகம்
ஆண்மையான‌ ஒரு முகம்
இம்சைத் தரும் ஒரு முகம்
ஈகை செய்யும் மறு முகம்...

உண்மையான ஒரு முகம்
ஊர்ச்சுத்தியாய் ஒரு முகம்
எளிமையான ஒரு முகம்
ஏற்கவியலா மறுமுகம்...

ஐயம் தரும் ஒரு முகம்
ஒழுக்கமில்லா ஒரு முகம்
ஓவியமாய் ஒரு முகம்
ஒளவியம் கொண்ட மறுமுகம்...

பன்முகங்கள் எனக்குண்டு
எந்த முகம் வேண்டுமென்று
தீர்மானம் நீயே செய்வாய்
கண்களில் அதையே காண்பாய்!

புதன், 23 மார்ச், 2016

முழுமையடையா வாழ்க்கை...





மண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை. பல காரணங்களாலும் கட்டமைப்புகளாலும் மனிதன் தான் வாழ விரும்பிய வாழ்க்கையைக் கற்பனையில் மட்டுமே வாழ்கிறான். 

ஒருவேளை கற்காலத்தில் குறுகிய கட்டுப்பாடுகளும் தேவைகளும் இருந்த வேளையில் அவன் முழுமையாக வாழ்க்கையை அனுபவித்திருப்பானா? தெரியவில்லை... இக்காலக்கட்டத்திலோ, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறையில் சமூகம் வகுத்த நீதிகளுக்கு அடிபணிந்து ஏதோவொரு வாக்கையையே பலரும் வாழ வேண்டியுள்ளது. மனித வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது. உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் வீடு என சில அடிப்படைத் தேவைகளைக் கூட பணம்தான் இன்று நிறைவேற்றுகிறது. இதனை முன்பே அறிந்துதான் அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனக் கூறிச்சென்றனரோ தெரியவில்லை. எண்ணிய கல்வியைப் பெற, விரும்பிய ஊர்களுக்குச் செல்ல, ஏன் பிறருக்கு உதவிப்புரியவும் கூட பணம் இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பணம் இருப்பவன் விரும்பிய வாழ்வையும், இல்லாதவன் எதற்கும் வக்கற்ற வாழ்வையும் வாழ வேண்டிய நிலை இன்று உருவாகிவிட்டது. 

அடுத்ததாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட எழுதிய சட்டங்களும் எழுதப்படாத விதிகளும் ஒருவன் தன் வாழ்வையை முழுதும் வாழ்ந்துவிட தடையாக இருக்கின்றன. பிறரால் உருவாக்கப்பட இவற்றுக்குள் சிக்குண்டு, ஆசைகளையும் விருப்பங்களையும் மனதிற்குள்ளேயே பூட்டி அதற்குக் கல்லறையும் கட்டி நடைப்பிணமாகவே பலரும் வாழ்கின்றனர். உதாரணமாக, மலேசிய நாட்டின் சட்டப்படி மலேசியக் குடிகள் இஸ்ரேல் நாட்டிற்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்கச் சுற்றி அனைத்து நாட்டையும் பார்த்துவிட வேண்டும் என ஒரு மலேசியன் கனவுக்கண்டிருப்பாயின், அவன் கனவு இவ்விடம் தகர்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனித்தனி சட்டங்களை இயற்றி மனிதனின் வாழ்வைத் தனது கைப்பிடியில் வைத்திருக்கின்றன. இவ்வளவு ஏன்? மனிதன் இயற்றிய சட்டமே இன்னொரு மனிதனின் உயிரைப் பறிக்கவும் வழிவகைச்செய்கிறது (தூக்குத்தண்டனை). 

அரசு ஒருபுறம் மனித வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் இந்தச் சமூகக்கோட்பாடுகளும், உற்றார் உறவினரின் நாற வாய்களும் சிதைத்துவிடுகின்றன. இவன் இப்படித்தான் வளர வேண்டும், இவர்களுடன் விளையாட வேண்டும், இந்தப் பள்ளியில்தான் சேரவேண்டும், இந்தப் பணிக்குத்தான் செல்ல வேண்டும், இத்தனை வயதிற்குள் திருமணம் முடிக்க வேண்டும், எந்தக் குழந்தைப் பெற வேண்டும் என இவர்களே பேசி முடிவெடுத்து, சதா சர்வக்காலமும் அதனைத் திருமந்திரம் போல் ஒருவன் காதில் ஓதி, அவனை இயந்திரம் போல் இயங்கவும் செய்துவிடுகின்றனர். ஒருவன் சுயமாகத் தனது எதிர்காலத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையையும் இழந்து ஏதோ ஒரு வாழ்க்கையை ஊர் உலகத்திற்காக வாழ்ந்துவிட்டு மறைகின்றான்.

சரி, பணமிருப்பவன் முழுமையாக வாழ்க்கையை வாழ்கிறானா? அதுவும் இல்லை. தன்னிடம் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பதிலும், அதனை அதிகரிப்புச் செய்வதிலுமே அவன் பாதி வாழ்க்கையை ஓட்டிவிடுகிறான். அதுமட்டுமன்றி மேற்கூறிய சட்டங்களும், சமுதாயக் கட்டுப்பாடுகளும் அவனைக் கட்டிவைக்கின்றன. இவ்வளவையும் எதிர்க்கொள்ளும் மனிதன் கடைசியில் என்னதான் ஆகிறான்? ஒன்று, நிலத்தில் புதைக்கப்படுகிறான் அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்படுகிறான். அவனது இருப்பை அதற்குமேல் அவனால் தக்கவைத்துக்கொள்ளமுடிவதில்லை. மூன்றாவது தலைமுறைக்குப் பிறகு அவனது பெயர் கூட எவருக்கும் நினைவிருப்பதில்லை.

எதற்காககோ பிறந்திருக்கிறோம்; எவ்வாறோ வாழ்கிறோம்; எப்படியும் இறந்து விடுவோம்; இந்தக் குறுகிய வாழ்க்கையை முழுவதுமாய் வாழாதா குற்ற உணர்ச்சியுடன்!

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

டார்ஜெலிங் (Darjeeling)





இந்திய எழுத்தாளர் எழுதிய ஆங்கில நாவல். முக்கோணக் காதலையும் தேயிலையையும் மையமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டமாகிய டார்ஜெலிங், அமெரிங்காவின் நியூ யார்க் நகரம், கனடா எனக் கதை வளர்ந்து நீண்டு மீண்டும் டார்ஜெலிங் தோட்டத்திலேயே நிறைவுறுகிறது. 

அலோகா மற்றும் சுஜாதா இருவரும் நீண்ட பெரும் பாரம்பரியம் உடையத் தேயிலைத் தோட்ட முதலாளியின் மகள்களாக வலம் வருகின்றனர். மூத்தவளான அலோகா அழகும் நிறமும் மிகுந்தவள். ஆகையால் அக்குடும்ப வழக்கப்படி மூத்தவளுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. அனைவரும் அலோகாவையேக் கொண்டாடினர். கவர்ச்சிக் குறைந்த சுஜாதாவிற்கு இது மிகுந்த வருத்தத்தை அளித்து அவளது தன்னம்பிக்கையையும் குறைத்தது. அலோகா அனைவரிடமும் பேசிப் பழகி மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தாள். சுஜாதா பெரும்பகுதி நேரங்களைத் தேயிலைத் தோட்டத்தில் செடிகளுடன் கழித்தாள். இதனால் இயற்கையாகவே சுஜாதாவிற்குத் தேயிலையின் மீது ஈர்ப்பு உண்டாயிற்று.  தேயிலையின் தரத்தையும், சுவையையும் பகுத்தறிவதில் சுஜாதா கைத்தேர்ந்தாள்.

இவர்கள் இருவரின் பருவ வயதில்தான் அதே கிராமத்தில் வசித்து வந்த பிரனாப்'பின் பழக்கம் இருவருக்கும் ஏற்பட்டது. அவர்களின் தந்தை பிர்'ரின் நிர்வாகப் பிரிவில் பிரனாப் புதியதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அழகு, அறிவு, தொழிலாளர் மேல் பரிவு என அவனிடம் இருந்த அனைத்து அம்சங்களும் இரு பெண்களையும் அவன் மேல் பித்துப் பிடித்து அலையச் செய்தன. முதலாவதாக அலோகாவிற்கும் பிரனாப்பிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் தன் உறவினர் திருமணத்திற்காக அலோகா சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. இடைவெளி இருந்தால் காதல் இன்னும் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் அலோகா காதலுடன் வெளியூர் சென்றாள். அந்த இடைவெளி காலத்தில் வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரனாப்பிற்கும் சுஜாதாவிற்கும் காதல் மலர்ந்தது.

அலோகாவைக் காட்டிலும் அழகும் கவர்ச்சியும் குன்றியிருந்த சுஜாதாவின் மனமும், அவள் தேயிலையின் மீது காட்டிய ஆர்வமும், தொழிளாலர்கள் மீது காட்டிய அக்கறையும் பிரனாப்பை அவள் மீது மையலுற வைத்தது. சுஜாதாவும் பிரனாப்பின் மீது காதலுற்றாள். இவர்களின் இந்தக் காதல் ரகசியத்தை அறிந்த பாட்டி நினா, தனது மகன் பிர்ரிடம் விடயத்தைக் கூறி சுஜாதாவைக் கனடாவிற்கு அனுப்பி வைத்தாள். அதே சமயம் பிரனாப் தொழிலாளர்களின் கிளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது பிர்ருக்குத் தெரிய வந்தது.  தனது மகள்களின் வாழ்வை அழித்ததோடல்லாமல் தனது தொழிலுக்கும் பங்கம் விளைவிக்கும் பிரனாப்பைத் தீர்த்துக்கட்ட பிர் முடிவெடுத்தார். பிர்ரின் திட்டத்தை அறிந்த நினா, அலோகாவிடம் விடயத்தைக் கூறி பிரனாப்பைக் காப்பாற்றும்படி பணிந்தாள். தனது காதலனைக் காப்பாற்றுவதற்காக, அலோகா இரவோடு இரவாக பிரனாப்பைக் கூட்டிக்கொண்டு டார்ஜெலிங்கை விட்டு, தன் குடும்பத்தைவிட்டு வெளியேறினாள்.

எப்படியோ நியூ யார்க் சென்று தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இனித்த இல்லறம் காலப்போக்கில் கசக்க ஆரம்பித்தது. அலோகா நியூ யார்க் வாழ்க்கையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டாள். பிரனாப்பால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பழையக் காதலும், தேயிலையும் அவனை வாட்டி வதக்கின. 8 வருடங்களுக்குப் பிறகு அலோகாவிடமிருந்து விவாகரத்தும் பெற்றுக்கொண்டான். சுஜாதா கனடாவில் தனக்குப் பிடித்தமானத் தேயிலை விற்பனையைத் தொடக்கி வெற்றிநடைப் போட்டுவந்தாள். பழைய காதலன் நினைவும், அலோகா எல்லாவற்றையும் தன்னிடமிருந்துப் பறித்துக்கொண்ட துயமும் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கவே செய்தன.

8 வருடங்களுக்குப் பிறகு பாட்டி நினாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி மிகவும் வயதான பாட்டித் தொலைப்பேசியின் மூலமும் அலோகாவையும், சுஜாதாவையும் அழைத்திருந்தாள். பிரனாப்பும் பழையக் காதலைப் புதுப்பிக்கும் முயற்சியில் டார்ஜெலிங் செல்ல ஆயத்தமானான். டார்ஜெலிங்கில் என்ன நடந்தது?? :)

சுஜாதா, அலோகா இருவரும் பிரனாப்பை ஒதுங்கித் தள்ள, பிரனாப் மீண்டும் நியூ யார்க்கிற்கே பறந்துச் செல்கிறான். அலோகாவும் தனது நகர வாழ்க்கையைத் தொடரச் செல்கிறாள். ஆரம்பத்தில் அனைவராலும் புறக்கணிப்பட்ட சுஜாதா, தேயிலைத் தோட்ட நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுத் தனது குடும்பப் பாரம்பரியத்தைக் காக்கத் தயாராகிறாள். 

இயன்றவறையில் கதைச்சுருக்கத்தைப் பிசகில்லாமல் இவ்விடம் கொடுத்துள்ளேன். வாய்ப்பிருந்தால் நாவலை வாசித்துப் பாருங்கள். நியூ யார்க், கனடா மற்றும் டார்ஜெலிங் வீதிகளில் நீங்களும் வலம் வருவீர்கள்.