வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மன்னிக்க மாட்டாயோ?


அன்பிற்கு உரியவனே
அடைக்கலம் தருவாயோ?
அழுகின்ற கண்களைத்
துடைத்திட வருவாயோ?

ஏனடா தண்டிக்கின்றாய்
பழையதை மறவாயோ?
உன்னின் பாதியானேன்
அதை நீ மறுப்பாயோ?

உன்னையே நினைத்திருக்கும்
என்னை நீ அறிவாயோ?
தவறேதும் செய்திருந்தால்
மன்னிக்க மாட்டாயோ?

திங்கள், 19 ஜூலை, 2010

மறுபக்கம்


ஒரு பக்கம் சிரிப்பு
மறு பக்கம் அழுகை
ஒரு பக்கம் இன்பம்
மறு பக்கம் துன்பம்!

ஒரு பக்கம் சந்தோஷம்
மறு பக்கம் வேதனை
ஒரு பக்கம் மகிழ்ச்சி
மறு பக்கம் கவலை!

என் ஒரு பக்கத்தை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கும் நீ
மறு பக்கத்தைக் கனவிலும் காணாதே
அது உன்னையும் துயரக் கடலில்
மூழ்க வைக்கும்!

சனி, 10 ஜூலை, 2010

பிரிவு!


கடந்த கால நினைவுகளை
சற்று எண்ணிப் பார்க்கின்றேன்
எத்தனை குறும்புகள், எத்தனைச் சேட்டைகள்
அத்தனையும் பள்ளி வாழ்க்கை முடியும் போது
சூரியனைக் கண்ட பனி போல ஆகிவிட்டன!

கடந்த வந்த பாதை என்னவோ
கற்களும் முற்களும் நிறைந்ததுதான்
ஏனோ அதிலும் ஒரு சுகம், ஒரு மகிழ்ச்சி
இளமைப் பருவத்திலே துள்ளித் திரிந்த காலம்
வாழ்வின் இனிமையானப் பருவம்!

எங்கேயோ பிறந்தோம் எங்கேயோ வளர்ந்தோம்
பள்ளி என்ற கூடத்திலே இணைந்தோம்
நட்பு என்னும் பந்தத்தை வளர்த்தோம்
மகிழ்ச்சி எனும் கடலில் நீந்தி மகிழ்ந்தோம்
இன்று பிரிவு எனும் மரணத்தை நெருங்கிவிட்டோம்!

சிரித்தோம், பேசினோன், பழகினோம்
அனைத்தையும் அசைப் போடுகையில்
இனம் புரியாத சுகமும் சுமையும்
மனதை வெகுவாக அழுத்துகின்றன
கண்கள் குளமாக மாறுகின்றன!

வாழ்வில் துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம்
தோள் கொடுத்து உதவிய நண்பர்கள்
மனம் கலங்கிய போதெல்லாம்
ஆறுதல் சொன்னத் தோழர்கள்
இப்போது பிரியத்தான் வேண்டுமா?

ஒன்றாக விளையாடினோம் ஒன்றாக சுற்றினோம்
இப்பொழுது ஒவ்வொருவரும் தனியாகச் செல்கிறோம்
சில மணித்துளிகளே சேர்ந்திருந்தாலும்
பல வருடங்கள் சேர்ந்திருந்தாலும்
நட்பின் ஆழம் மனதை பாதிக்கவே செய்கிறது!

நட்புக்கு இலக்கணம் எழுதத் தேவையில்லை
நட்பினிலே நம்பிக்கை இருந்தால் போதுமானது
சில நேரம் சண்டை மறு நேரம் கூத்து
இப்படியே கழித்துவிட்ட பள்ளி நாட்கள்
என்றென்றும் பசுமையாய் நெஞ்சினிலே!

நட்புக்குரியவர்களை நினைத்துப் பார்க்கையில்
மனதை ஏக்கம் வெகுவாகத் தாக்குகின்றது
இளமைப் பருவத்தின் கேலி, கிண்டல்கள்
இனி மீண்டும் வாழ்வினிலே திரும்புமா?
துக்கம் தொண்டையை அடைக்கின்றது!

அக்கா-தம்பி, அண்ணன்-தங்கை
உறவில்லா உறவுகள் பள்ளியிலே
சினிமா வசனங்கள் தூள் பறக்கும்
சோதனை முடிவுகளோ கோல் அடிக்கும்
என்றென்றும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

அனைத்துமே முடிந்துவிட்டது
சந்திப்பு தடைப்பட்டுவிட்டது
சந்தோஷம் மறைந்துவிட்டது
வேலை, வீடு, ஊண், உறக்கம்
மாறாத அட்டவணையில் நீயும் நானும்!

வெள்ளி, 9 ஜூலை, 2010

வாழ்க்கை சலித்துவிட்டது



உலகமே இருண்டு விட்டதைப் போல்
காற்று நின்று விட்டதைப் போல்
அனைவரும் என்னை வெறுப்பது போல்
உள்ளுக்குள் ஓர் உணர்ச்சி!

மெய்யா பொய்யா? புரியவில்லை
மதியற்ற பெண்ணா? தெரியவில்லை
எல்லாமே கற்பனையா? தெளியவில்லை
என்று தீருமோ? அறியவில்லை!

வாழும் வாழ்க்கை வெறுத்துவிட்டது
சிரித்த சிரிப்பு மறந்துவிட்டது
நிம்மதி அனைத்தும் தொலைந்துவிட்டது
உணர்ச்சிகள் எல்லாம் மறத்துவிட்டது!

சாலையில் திரியும் நாயைப் போல்
சாக்கடையில் விழுந்த பூனையைப் போல்
மழையில் நனையும் மாடைப் போல்
மதிப்பற்ற வாழ்க்கை வாழ்கிறேனோ?

வாடி வதங்கிய செடியாய்
நைந்து நூலான சேலையாய்
கசக்கிப் போட்ட குப்பையாய்
உயிருள்ள பிணமாய் நான்!

சாகும் நாட்களை எண்ணி
எமனின் வரவை எதிர்ப்பார்த்து
ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாழ்க்கை சலித்துவிட்டதால்!

வியாழன், 10 ஜூன், 2010

கனவே!


வாழ்க்கையே கனவா
கனவுதான் வாழ்க்கையா
கனவுகள் பல விதம்
வாழ்க்கையே தனிவிதம்!

பகலிலும் கனவு
கனவிலும் ஆசை
நிறைவேறா ஆசைகள்
கனவிலும் நடக்காதா?

காலங்கள் வேகமாய் ஓடும்
கனவுகள் விதம் விதமாய் மாறும்
நனவாக ஆகும் முன் சாகும்
கனவினால் இதயமே நோகும்!

உயிரின்றி சாவா?
கனவின்றி வாழ்வா?
காண்பதெல்லாம் மெய்யா?
மற்றதெல்லாம் பொய்யா?

நான் காணும் கனவுகள்
நனவாக மாறாதா?
கற்பனைக் கவிதைகள்
உயிர்ப்பெற்று வாழாதா?

புதன், 12 மே, 2010

பொய் வேண்டாம்


பொய்மை வேண்டாம்
காதலில் பொய்மை வேண்டாம்
பொய் என்பது போலி
உண்மையே என்றும் நிஜம்
காதல் உண்மையானால்
அதனுள் எதற்குப் பொய்?

நீ ஒவ்வொரு முறை
பொய் சொல்லும் போதும்
அவ்வளவுக்களவு நம் காதலின்
உண்மைக் குறைகின்றது!

உண்மை குறையும் போது
நாமும் நம்மை அறியாமலேயே
ஒருவர்க்கொருவர் கொஞ்சம் கொஞ்சமாக
விலகிக் கொண்டிருக்கின்றோம்!

நமது இந்த விலகல்
நிரந்தர பிரிவிற்கு
இழுத்துச் செல்லும் என்பதை
ஒருநாளும் மறவாதே
உண்மைக் காதலில்
பொய் பேசாதே!

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

காதல் வேண்டாம்!


அன்பே என்று அழைக்க வேண்டாம்
அமுதே என்று கொஞ்ச வேண்டாம்
ஆசை வார்த்தைக் கூற வேண்டாம்
அழகி என்று புகழ வேண்டாம்!

கண்ணே என்று கனிய வேண்டாம்
கனியமுதே என்று குழைய வேண்டாம்
கற்கண்டே என்று வடிய வேண்டாம்
காதல் கண்றாவி என்றும் வேண்டாம்!