சனி, 20 செப்டம்பர், 2014

அவளும் அதுவும்... (பாகம் 2)



பார்த்தீங்களா? நான் சொன்னேன். அந்தச் சின்னதா இருக்கிறது ராஜாவோட பிள்ளையைப் புதைச்ச இடம்னு நினைக்கிறேன். பெரிசு அந்தப் பொம்பளையோடதா இருக்கணும்,” என்று சசி சொல்லி முடிக்கையில் அவர்கள் அனைவருக்கும் வேர்த்து நனைந்திருந்தது.

மீண்டும் தரைவிரிப்பை கவனமாக விரித்து வைத்துவிட்டு சிறுவர்கள் அந்தக் கடைசி அறையைவிட்டு வெளியேறினர்.

இதற்குப் பிறகு நான் இந்த அறைக்கு வரமாட்டேன்பா,” என்று வாணி பீதியுடன் கூறினாள்.

அதெல்லாம் ஒன்னுமில்ல. நாம்அதைதொந்தரவு செய்யலைன்னாஅதுவும் நம்மைத் தொந்தரவு செய்யாது,” என்று சமாதானம் கூறினாள் மூத்தவள் மேகலா.

யாரும் பயப்படாதீங்க. நீங்க பயந்தாதான் அது தொந்தரவு செஞ்சு பயமுறுத்தும்.” என்று தைரியம் சொன்னான் ராம்.

சரி வாங்க, நாம் போய் பட்டம் விட்டு விளையாடலாம்,” என்று அனைத்தும் மறந்தவனாய் அழைத்தான் இந்திரன். பாலாவுக்கு மற்றவர்கள் பேசுவது அவ்வளவாகப் புரிந்ததாகத் தெரியவில்லை. பவானிக்கு ஏதோ புரிந்தும் புரியாததுமாய் இருந்தது. கடைசி அறையைத் திரும்பிப் பார்த்துவிட்டுபெரியபிள்ளைகளுடன் அவளும் பட்டம் விடச் சென்றாள்.

அன்றிரவு பெண்களும் குழந்தைகளும் இரண்டாவது அறையில் படுத்திருந்தனர். அப்பாவும் மூத்த வயது ஆண்கள் மட்டும் வரவேற்பறையில் பாய் விரித்துப் படுப்பது வழக்கம். தாத்தா முதல் அறையான பூசை அறையில் படுத்துக்கொள்வார். அந்த வீட்டிலேயே தாத்தாவுக்குத்தான் பக்தி அதிகம். அந்தப் பூசை அறையில் பத்துக்கும் மேற்பட்ட சாமிப் படங்கள், சிறிய பிள்ளையார் சிலை, சில மயில் தோகைகள் மற்றும் பூசைக்குத் தேவையான சூடம், சாம்பிராணி என அனைத்துப் பொருட்களும் இருந்தன. தினமும் மாலையில் வேப்ப மரத்தருகில் பூத்திருக்கும் வெள்ளைப் பூக்களையும், சாமந்திப் பூக்களையும் பூசைக்காகப் பறித்து வைப்பது அவ்வீட்டுச் சிறுவர்களின் தவறாத கடமையாக இருந்தது. பூசையின் போது தாத்தா யாரையும் அறையினுள் அனுமதிக்க மாட்டார். அவர் பூசைப் போட்டு, தியானம் செய்து முடித்தப் பின் சிறுவர்கள் அனைவரும் சாமி அறைக்குச் சென்று தேவாரம், திருவாசகம் படித்து சாமி கும்பிட வேண்டும். தாத்தா அனைவருக்கும் திருநீறு வழங்குவார். பின்னர் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துப் படிக்க வேண்டும். இந்து அவர்களின் தினசரி பழக்கங்களில் ஒன்று.

இரவு தூங்கும் வேளையில், மேகலாவும் வாணியும், பவானிக்குக் கதைச் சொல்லி தூங்க வைப்பது வழக்கம். பாலா கடைக்குட்டியாதலால் தாத்தாவுக்குச் செல்லப் பேரப்பிள்ளை. எனவே, அவன் எப்பொழுதும் தாத்தாவுடன் பூசை அறையிலேயே படுத்துக்கொள்வான். பாட்டியும் அம்மாவும் இரண்டாவது அறையில் உள்ள கட்டிலில் படுத்துக்கொள்வார்கள். மேகலா, வாணி, பவானி மூவரும் அதே அறையில் பாய் விரித்துப் படுத்துக்கொள்வார்கள்எனவே, பெரியவர்களுக்கு விளங்காத வண்ணம் மெல்லிய குரலில் கதைப் பேசுவது அவர்களுக்கு எளிதாயிற்று. பள்ளியில் நடந்த விடயம், அவர்கள் தோழிகள் சொன்ன கதை, பேய்க்கதை, மர்மக்கதை, கற்பனைக் கதை என பல கதைகளை அவர்கள் பவானிக்குச் சொல்லி தூங்க வைப்பர். இதில் பேய்க்கதைகள் பவானியை அதிகம் கவர்ந்தன. அவளது கற்பனைகளும் வளர்ந்து விரிந்தன. பேய்கள் பற்றிய பயத்தைவிட ஆர்வமே அவளுக்கு மேலோங்கியது.

தான் இருப்பது ராஜா வீடு என்று தெரிந்த பிறகு அவளது கற்பனைகள் எல்லையைக் கடந்தன. யாரும் பார்க்காத போது அவள் அந்தக் கடைசி அறையைத் திறந்துப் பார்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் பார்க்கும் போது அவள் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும். தினமும் பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம், உடன்பிறப்புகளுடன் விளையாட்டு, கதைகள் பேசுதல் என அவளது குழந்தைப் பருவம் மற்ற பிள்ளைகளைப் போன்றே இருந்தது. பவானி வளர்ந்து ஆரம்பக் கல்வி கற்கலானாள்.

ஒருநாள் பவானி வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென மாணவி ஒருத்தி கத்தி அலறும் சத்தம் கேட்டது. அவளுடைய கதறல் மிகவும் கோரமானதாக இருந்ததுசாதாரணச் சிறுமியின் அலறல் போன்று இல்லை. அந்த அலறலில் ஒரு வெறித்தனம் இருந்தது; கொடூரம் இருந்தது; தாங்க முடியாத வலி இருந்தது. அந்த அலறல் கேட்போரை மிரளச் செய்தது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு கணம் குழம்பித் தடுமாறினர். மறுகணம் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினர். மாணவர்கள் என்ன நடக்கின்றது என அறிந்துக்கொள்ள கதவருகிலும், சன்னல் அருகிலும் கூட்டமாக எட்டி எட்டிப் பார்த்தனர். பாட வேளையில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றான் ஆசிரியர் திட்டுவார் என்பதால் யாரும் வகுப்பறையை விட்டு வெளியே செல்லவில்லை.

அது சிறிய பள்ளிக்கூட்டம் என்பதால் அந்த மாணவியின் அழுகுரல் மிகவும் தெளிவாகக் கேட்டது. பவானி வகுப்பின் கதவருகில் அமர்ந்திருந்ததால் சிற்றுண்டிச் சாலையில் நடப்பது அனைத்தும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தன. பவானியை விட இரண்டு வயது பெரியவளான பரிமளாதான் அந்த அழுகுரலுக்குச் சொந்தக்காரி. பரிமளா கைகளையும் கால்களையும் தரையில் வேகமாக உதறியடித்து அழுதாள். மலாய் மொழியில் என்னென்னவோ சொல்லியழுதாள். தமிழ்ப்பள்ளி மாணவியான அவள் மலாய் மொழியில் புலம்பி அழுவது வித்தியாசமாக இருந்தது. அவளது மூக்கிலும் கண்களிலுமிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து அவளது சீருடையை நனைத்துவிட்டிருந்தது. அவள் தானாகவே தலை முடியைப் பிய்த்து எரிவது போல் இழுத்தாள்.

அவளைச் சமாதானப்படுத்த சில ஆசிரியர்கள் முயன்றுக் கொண்டிருந்தனர். அறிவியல் ஆசிரியர் வனஜா, பரிமளாவின்  கைகளைப் பிடித்துக்கொண்டார். அவரது பிடியில் பரிமளா திமிறினாள். தமிழாசிரியரான நாராயணன் அவளுடன் பேச்சுக்கொடுக்க முயன்றார். பரிமளா அவருடன் பேசுவதாக இல்லை. அவள் தரையில் உருண்டு பிரண்டு கத்த ஆரம்பித்தாள். மற்றவர்கள் பீதியுடன் சுற்றி நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது, பள்ளிச் சிற்றுண்டிச் சாலையின் குத்தகையாளர் திரு.கண்ணனின் மகிழுந்து அருந்தகத்தின் அருகே வந்து நின்றது. மளிகைப் பொருட்களை மகிழுந்திலிருந்து எடுத்துக்கொண்டே அவர் குழுமி நின்ற கூட்டத்தைப் பார்த்தார். பரிமளாவின் குரல் அவரை திகைக்கச் செய்திருக்க வேண்டும். மீதியிருந்த பொருட்களை மகிழுந்திலேயே விட்டுவிட்டு அவர் கூட்டத்தினூடே விரைந்துச் சென்றார். கையிலிருந்த பொருட்களை மனைவியிடம் கொடுத்துவிட்டு அவர் பரிமளாவின் அருகில் சென்றார். பரிமளா அவரை கவனித்ததாகத் தெரியவில்லை. யாரும் எதிர்பாரா வேளையில் உரத்தக் குரலில் கண்ணன் பரிமளாவை நோக்கிடியாம்!”[1] என்று அதட்டினார்.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்ததுஇவ்வளவு நேரமும் திமிறிக் கொண்டிருந்த பரிமளா சட்டென அமைதியாகிக் கண்ணனைப் பார்த்தாள். அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது. பிறகு, ஓவென கதறியழ ஆரம்பித்தாள். கண்ணன் சுற்றியிருந்த கூட்டத்தைப் பார்த்தார். ஆசிரியர் வனஜாவையும் தனது மனைவியையும் மட்டும் இருக்கச் சொல்லி மற்றவர்களைக் களைந்துப் போகச் சொன்னார். வகுப்பறையை விட்டு வெளியே வந்து வேடிக்கைப் பார்த்த மாணவர்களை விரட்டியபடி ஆசிரியர்கள் தத்தம் வகுப்பறைகளுக்குச் சென்றார்கள்.

கண்ணன் வனஜா ஆசிரியரின் துணையுடன் பரிமளாவை சிற்றுண்டிச் சாலையின் உள் அறைக்குள் தூக்கிச் சென்றார். சில நொடிகள் கடந்த பின் பரிமளா உரத்த குரலெடுத்து அலறினாள்; பின் அவள் சத்தம் ஓய்ந்தது. பவானியின் வகுப்பறையில் பாடம் தொடர ஆரம்பித்தது. ஆனால், அவளால் அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. நொடிக்கொருதரம் அவளது கண்கள் சிற்றுண்டிச் சாலையை நோக்கிச் சென்றன. சில நிமிடங்களுக்குப் பிறகு மயக்க நிலையில் இருந்த பரிமளாவைக் கண்ணன் தூக்கி வருவது தெரிந்தது. அவரைப் பின் தொடர்ந்து வனஜா ஆசிரியரும் வந்தார். மூவரும் பள்ளி வரவேற்பறையை நோக்கிச் சென்றனர். பின்னர் கண்ணன் சிற்றுண்டி சாலைக்கும், வனஜா தனது வகுப்பறைக்கும் செல்வது தெரிந்தது. பரிமளா வரவேற்பறையில் உள்ள நீண்ட நாற்காலியில் படுத்திருக்க வேண்டும். பள்ளி சபைக்கூட்டத்தில் மயக்கமுறும் மாணவர்களையும், திடீரென உடல்நலக்குறைவு ஏற்படும் மாணவர்களையும் அங்கே படுக்க வைத்து ஓய்வெடுக்கச் செய்வது பள்ளியின் வழக்கம்.

அன்றைய தினம் பள்ளி முடிவதற்குள், ’பரிமளாவிற்குப் பேய் பிடித்திருக்கிறதுஎன்ற  வதந்தி காட்டுத் தீ போல் பள்ளி முழுவதும் பரவிவிட்டது. அதற்குப் பின் சில தினங்களுக்குப் பரிமளா பள்ளிக்கூடம் வரவில்லைஅவள் மீண்டும் பள்ளிக்கு வந்த பிறகுபேய் பிடித்ததற்கானஎந்த அடையாளமும் அவளிடம் இல்லை. இந்தச் சம்பவம் பவானியின் மனதில் ஆழப் பதித்துவிட்டது. சிற்றுண்டிச் சாலையில் அலறிய பரிமளாவின் மிரண்ட உருவம் அடிக்கடி அவள் மனக்கண்ணில் வந்துப் போனது. அந்தச் சம்பவம் தொடர்பாக யார் என்ன பேசினாலும் அவள் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள். பலரும் பலவாறு அந்தச் சம்பவத்தைத் திரித்துக் கூறினர். மற்றவர்கள் பேசியதிலிருந்து அவள் புரிந்துக்கொண்டது ஒன்றுதான். பரிமளா தனியாக உச்சி வெயிலில் சென்ற போது அவளுள் மலாய்ப் பெண்மணியின் ஆவி ஒன்று புகுந்துவிட்டது. அது தனது மகனைப் பார்க்க வேண்டும் என்று கதறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. அதனைக் கண்ணன் நயமாகப் பேசி விரட்டிவிட்டுவிட்டார்.
                                       





[1] சத்தம் போடாதே

...தொடரும்

கருத்துகள் இல்லை: