வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 6)




அருண்ஷோரியும் கீரா அண்ணாவில் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டார். சிறு உரையாடலுக்குப் பிறகு அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். நான் வேண்டுமென்றே வாசனின் இரு சக்கர வண்டியில் ஏறிக்கொண்டேன். அலுவகத்தில் சிகா மற்றும் ஏகலைவன் ஆகிய இருவரையும் அண்ணா அறிமுகம் செய்து வைத்தார். சிறிது நேரம் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். இன்று சைதாப்பேட்டைச் செல்ல வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான சாலை ஆர்ப்பாட்டம் அங்குதான் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அருண்ஷோரி முன்னதாகவே அங்குச் சென்றுவிட்டார். வாசனும் கீரா அண்ணாவும் அலுவல் இருப்பதால் பின்னர் வந்துக் கலந்துக் கொள்வதாக வெளியே சென்று விட்டனர். எனவே சிகா அண்ணா எம்மை சைதாப்பேட்டை , பனகல் மாளிகை அருகே கொண்டு விட்டார். வண்டியில் போகும் போது பல விடயங்களைப் பற்றி இருவரும் கதைத்துக் கொண்டே சென்றோம். அவருக்கு இம்மாதிரியான போராட்டங்களின் ஆர்வம் குறைவு என்பதை அவரது பேச்சிலிருந்து அறிந்துக் கொண்டேன். இருந்த போதிலும் அவர் எம்மைத் தடுக்கவில்லை.

பனகல் மாளிகை அருகில் சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. பெரும்பாலானவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். பெண்கள் மிகச் சிலரே அவ்விடம் நின்றிருந்தனர். ஒலிப்பெருக்கியில் தோழர் ஒருவர் கூடங்குளம் அணு உலையை எதிர்து மிக ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார். சாலை ஓரத்தில் பாதுகாப்பிற்காக காவல் துறை வண்டி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. சில காவல் துறையினர் அவ்விடம் வருவோர் போவோர் மீது ஒரு கண் வைத்த வண்ணம் இருந்தனர். வழிப்போக்கர்கள் சிலர் நின்று பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பலர் கேட்டும் கேளாமல் எதையோ அவசரமாகத் தேடிச் செல்வது போல் சென்றுக் கொண்டிருந்தனர்.

நானும் கூட்டத்தோடு கூட்டமாக போராட்டத்தில் கலந்துக் கொண்டு எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினேன். தோழர் அருண்ஷோரி சிறிது நேரம் வந்து கதைத்துவிட்டுச் சென்றார். அவர்தான் அந்த கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் மிகவும் வேலையாக இருந்தார். வானம் கறுக்கத் தொடங்கியது. எம்மை அழைத்து வந்த சிகா அண்ணா, “எல்லாம் பார்த்தாகிவிட்டது. செல்லலாமா?” என்றார். அந்தக் கேள்வி எமக்கு சற்று அதிர்ச்சியளித்தது.

நாங்கள் அவ்விடம் வந்து 30 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் புறப்படுவதா? எவ்வளவு கடினப்பட்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருப்பார்கள்? இதில் இறுதி வரை கலந்துக் கொண்டு நமது பங்களிப்பையும் வழங்க வேண்டாமா? “உங்களுக்கு வேலை இருந்தால் நீங்கள் புறப்படுங்கள். நான் பிறகு ஆட்டோ ஏறி வந்துவிடுகிறேன்,” என்றேன். அவர் தயங்கினார். “புது இடத்தில் உங்களை எப்படி தனியே விட்டுச் செல்வது. வேண்டுமென்றால் இன்னும் ஒரு 10 நிமிடங்கள் இருந்துவிட்டுப் புறப்படுவோம்,” என்றார்.

“சரி. நான் தனியே வரவில்லை. அருண்ஷோரியுடன் வந்து விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள் அண்ணா,” என்றேன். அவர் இன்னமும் தயக்கத்தோடு நின்றார். அருண்ஷோரியிடம் நிலைமையை எடுத்துக் கூறவும், “நானே அழைத்து வந்து விட்டு விடுகிறேன்,” என அவர் உத்திரவாதம் வழங்கியப் பிறகுதான் சிகா அவ்விடத்தை விட்டு அகன்றார். கூட்டத்தில் எமது மற்றுமொரு தோழர் எழில்வாணனை தற்செயலாக அவ்விடத்தில் சந்திக்க நேர்ந்தது. இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

நான் வெகு நேரம் தனியாக நிற்பதைப் பார்த்து அருண்ஷோரி தோழர் இரமணியை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பல போராட்டங்களில் பங்கெடுத்த அனுபவம் இரமணியின் முகத்தில் பிரதிபலித்தது. கையில் சில துண்டறிக்கைப் பிரசுரங்கள் இருந்தன. மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) தூக்குதண்டனையை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் துண்டறிக்கைகளை அவர் வருவோர் போவோருக்கு விநியோகம் செய்துக் கொண்டிருந்தார். வெறுமனே நின்றுக் கொண்டிருக்க விரும்பாமல் அவருடன் சேர்ந்து நானும் அதனை விநியோகம் செய்ய ஆரம்பித்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் காயத்ரி, அம்பிகா எனும் இரமணியின் பெண் தோழர்கள் இருவர் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர். சின்னப் பிள்ளைகள்தான். வயது 18-லிருந்து 22-க்குள்தான் இருக்க வேண்டும். அனுபவம் போதாததாலோ என்னவோ அவர்கள் அறிமுகம் இல்லாதோரிடம் துண்டறிக்கைகளைக் கொடுக்கச் சற்றுத் தயங்கினர். ஆனாலும் முடிந்த வரையில் அனைவரிடமும் கொடுக்க முயற்சித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த வயதான பெரியவர் ஒருவரிடம் நான் துண்டறிக்கையை நீட்ட, அவர் அதை வாங்கிக் கொண்டு எம்மை உற்று நோக்கினார். “இது எதற்கு?” எனக் கேட்டார். “மூவர் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள்,” என்றேன். “அப்படினா, கொலை செய்தவன் எல்லாம் சுதந்திரமா நடமாடலாமா? அவங்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாதா?” என வாக்கு வாதத்திற்குத் தயாரானார். நானும் அவருக்கு பதிலளிக்க முனைகையில் தோழர் இரமணி குறுக்கிட்டார்.
“எதுவா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க,” என இரமணி சொல்லவும் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது. அங்கே நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாமல் நான் மற்றவர்களுக்குத் துண்டறிக்கைகளைக் கொடுக்க நகன்றுச் சென்றேன்.

அனைத்துத் துண்டறிக்கைகளையும் கொடுத்து முடித்த பிறகு நாங்கள் நால்வரும் தேநீர் கடைக்குச் செல்லலாம் என முடிவுச் செய்தோம். தோழர் அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தி விட்டு உரையாடிக்கொண்டே அருகாமையில் இருந்த தேநீர் கடையினுள் நுழைந்தோம். பாதாம் பால் ஒன்றை வேண்டிக்கொண்டு பல விடயங்களைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அவர்களது போராட்ட வாழ்க்கை எமக்குப் பிடித்திருந்தது. 29-ஆம் திகதி அக்டோபர் மாதம் 2011 அன்று பெண்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மதியம் நான் மலேசியா திரும்ப வேண்டியிருப்பதால், முயன்றுப் பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.

பின்னர் தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். அலுவலகத்தின் அண்ணாவுடனும் வேறு சில தோழர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் நான் அமைதியாகவே அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. கீரா அண்ணா மதியம் அவர் செய்த அரைவேக்காடு முட்டையை நான் சாப்பிடவில்லை எனச் சொல்லி மீண்டும் சமைக்க ஆயத்தமானார். அலுவலகத்தில் சமைக்கும் வசதி இருந்ததால் எஞ்சி இருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் ஆரம்பமானது.

எனக்குப் பசியில்லை எனச் சொல்லியும் அண்ணா விடவில்லை. அவராகவே எமக்கு ஊட்டி விட்டுச் சாப்பிடச் செய்தார். அண்ணாவின் அன்பில் நான் நெகிழ்ந்துப் போனேன். மற்ற தோழர்கள் எங்களைக் கிண்டல் செய்தனர். அதற்குள் கண்ணா அண்ணா ஐந்தாறு முறை எமது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். நள்ளிரவு 12 மணி தாண்டித்தான் நான் வீடுச் சென்று சேர்ந்தேன். கண்ணன் அண்ணாவும் பாக்கியா அக்காவும் எனக்காகக் காத்திருந்தனர். குளித்துவிட்டு வந்து பாக்கியா அக்காவுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இலங்கையிலிருந்து கவிதாவின் தோழி மேனகாவும் அன்றுதான் சென்னை வந்திருந்தாள். அவளுடனும் சிறு அறிமுகம் செய்துக்கொண்டுப் படுக்கைக்குச் சென்றேன்.


கருத்துகள் இல்லை: