வியாழன், 20 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 21)




காலையிலேயே எழுந்து, குளித்துப் பசியாறினேன். பாக்கியா அக்காவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். எப்படியோ எனது முதுகில் இருந்தச் சின்னத்தைப் பார்த்துவிட்டார். பார்த்ததோடு நில்லாமல் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் சொல்லிவிட்டார். என்னால் இவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என வருத்தமாக இருந்தது. ஆனால், அவர்களோ மிகுந்த சந்தோஷமடைந்தனர். நேற்று வரை எம்மிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்த பாக்கியாவின் கணவனான கண்ணன் அண்ணா அதன் பிறகுதான் என்னிடம் சகஜமாக பேசவே ஆரம்பித்தார்.

திரைப்படங்களில் அதிகமாக உச்சரிக்கபடும் சத்யம் திரையரங்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். அன்று மதியம் குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழுந்தில் மகிழ்ச்சியாக சத்யம் திரையரங்கிற்குச் சென்றோம். அங்கே பாலன் அண்ணாவும் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். படம் திரையிடப்படுவதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. நானும் மற்ற பெண்களும் திரையரங்கிற்கு முன்னால் சாலை ஓரத்தில் ஒரு கல்லில் அமர்ந்துக் காத்திருந்தோம்.

பெரும்பான்மை இளையோர்களே அவ்விடம் குவிந்திருந்தனர். பெண்கள் காற்சட்டை, உடம்பைப் பிடித்த மேற்சட்டை என மலேசியப் பெண்கள் போல்தான் உடையணிந்திருந்தனர். விரித்துப் போட்டிருந்த அவர்களது சிகையலங்காரமும், சாயம் பூசிய உதடுகளும் அவர்கள் நவநாகரிக மங்கைகள் என பறைசாற்றியது. சிலர் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த பை, கல்லூரி மாணவர்களாக இருக்கக்கூடும் என எம்மை அனுமானிக்கச் செய்தது.

நேரம் நெருங்கியவுடன் நாங்கள் அனைவரும் திரையரங்கிற்குள் நுழைந்தோம். நுழைவாயிலில் இருந்த காவலாளிகள் எனது பையைத் திறக்கச் சொல்லி சோதனையிட்டனர். எதற்காக திரையரங்கில் இவ்வளவு சோதனை என எனக்கு சற்று வியப்பாக இருந்தது. அரங்கிற்குள் நுழைந்தேன். எங்கள் இருக்கையின் எண் பார்த்து அமர்ந்துக் கொண்டோம். சாதாரண திரையரங்குதான். இதில் அப்படி என்னச் சிறப்பு? அதே வெண்திரை, நாற்காலிகள், விளக்குகள்! எனக்கு அது புதுமையாகத் தெரியவில்லை. அங்குள்ள மனிதர்கள் மட்டுமே புதுமையாகத் தெரிந்தனர்.

எமது பின்னால் குரல் தாழ்த்தி யாரோ பேசுவது கேட்க திரும்பிப் பார்த்தேன். முழுக்க முக்காடிட்ட பெண் ஒருத்தி பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த இளைஞனின் பக்கத்தில் இன்னொரு ஆண். அவன் பக்கத்திலும் அதே போல் முழுக்க முக்காடிட்ட ஒரு பெண். முஸ்லிம் பெண்களாக இருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். நான் அவர்களைப் பார்ப்பதை என்னருகில் அமர்ந்திருந்த கவிதா பார்த்துவிட்டாள். “இங்க காதலிக்கிறவங்கெல்லாம் யாருக்கும் தெரியக்கூடாதென்று இப்படித்தான் முக்காடிட்டு மூடிக்கொண்டு சினிமாவுக்கு வருவாங்க. அவங்க பெத்தவங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சனை தானே? இப்படி வந்தா யாருக்கும் அடையாளம் தெரியாது தானே?” என விளக்கினாள்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. நாங்கள் பேசுவது பின்னால் அமர்ந்திருந்தவர்களுக்கு விளங்கக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் நான் எதுவும் பேசவில்லை. புரிந்தது என்பதற்கு அடையாளமாய் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டேன். படத்தின் தலைப்பு ‘108’. படம் ஓடிக்கொண்டிருந்த போது தற்செயலாகத் திரும்பிப் பார்த்தேன். கவிதா சொன்னது உண்மைதான். அந்தப் பெண்கள் தங்கள் முகத்தில் மூடியிருந்த துணியை விலக்கிவிட்டிருந்தனர். நெற்றியில் இருந்த பொட்டு அவர்கள் முஸ்லிம் அல்ல என்பதனைத் தெளிவுப்படுத்தியது. பெற்றோரின் மீது அவ்வளவு பயம் இருந்தால் இப்படிச் சுத்தாமல் அவர்களின் சொல் கேட்டு நடக்கலாமே? அல்லது காதலிக்கத் தைரியம் இருக்கும் இவர்கள் பெற்றோரிடம் அதனைத் தைரியமாகக் கூறி சுதந்திரமாகச் சுற்றலாமே? இவர்களின் இந்தச் செய்கை சரியா தவறா என அதற்கு மேலும் நான் குழப்பிக்கொள்ள விரும்பாமல் மீண்டும் படத்தில் ஆழ்ந்தேன்.

இடைவேளை வந்தது. அரங்கிற்குள் விளக்குகள் எரியப்பட்டன. அவரவர் இருக்கையை விட்டு வெளியே போக ஆரம்பித்தனர். “என்ன ஆனது?” என கவிதாவைக் கேட்டேன். கழிவறைக்குச் செல்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள், தின்பண்டம் வாங்குபவர்கள் எல்லாம் எழுந்துச் சென்று தங்கள் வேலைகளை முடித்து விட்டு மீண்டும் வந்துவிடுவார்கள் என அவள் விளக்கம் சொன்னாள். “உங்கட நாட்டுல இடைவேளை இருக்காதா? யாரும் எழும்பிப் போக மாட்டாங்களா?” எனக் கேட்டாள். “இடைவேளை என்ற எழுத்து மட்டும் படத்தில் வரும். தொடர்ந்து படம் ஓடும்,” என்றேன். சிறிது நேரம் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தோம். சித்தியின் மகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். வீட்டுக்குப் போகலாம் என்று சித்தியைத் தொந்தரவுச் செய்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் சென்றவர்கள் மீண்டும் தத்தம் இருக்கைக்குத் திரும்பினர். கண்ணன் அண்ணாவும் பாலன் அண்ணாவும் எங்களுக்குப் பொரித்த சோளக்கதிர்கள் (பாப்கோர்ன்) மற்றும் சுவை பானங்கள் வாங்கி வந்தனர். பொரித்த சோளக்கதிர்களின் சுவை எங்கள் நாட்டைக் காட்டிலும் சற்று மாறுபட்டிருந்தது. எங்கள் நாட்டில் அது இனிப்பாக இருக்கும். இங்கோ அதில் உப்பும், மிளகாய் தூளும் கலக்கப்பட்டிருந்தது. படம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாய் வீடு சென்றோம். அன்றிரவு பாக்கியா அக்காவும், கவிதாவும் எனது காதல் கதைகளைத் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துக் கொண்டனர். மீண்டும் மீண்டும் சீக்கிரம் திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தினர். “பார்க்கலாம்” என்ற ஒற்றை வரியுடன் புன்னகையையும் உதிர்த்தேன். இணையத்தில் சிறிது நேரம் நேரத்தை செலவழித்தப் பிறகு கண் மூடி நித்திரைக் கொண்டேன்.

மறுநாள் இரண்டு சந்திப்புக்கள் இருந்தன. முதல் சந்திப்பை முடித்துவிட்டு, இரண்டாவது சந்திப்புக்குத் தயாரானேன். வெள்ளிக்கிழமை நான் சேலை அணிவது வழக்கம். அன்று வீட்டிலிருந்த கவிதாவும் என்னுடன் வருவதாகச் சொல்லியிருந்தாள். செல்வது புதிய இடம் என்பதால் துணைக்கு ஆள் வருவது நல்லதுதான் என அவளையும் அழைத்துக் கொண்டேன். நான் சேலை அணிந்திருப்பதைப் பார்த்து அவளும் அதே மாதிரி ஒரு சேலை அணிந்துக் கொண்டாள். எனக்கு ஒரு தங்கை இருந்தாள் எப்படி இருப்பாளோ அப்படி அவள் அந்தச் சேலையில் காட்சியளித்தாள்.

இப்போது நாங்கள் சந்திக்கச் செல்வது அதிகம் அறிமுகமில்லாத ஒரு திரைப்பட இயக்குனர். செல்ல வேண்டிய இடம் கோடம்பாக்கம். ஏற்கனவே நேரமாகிவிட்டதால், பேருந்தில் செல்லாமல் ஆட்டோ எடுத்தோம். கோடம்பாக்கத்தில் இருந்த ஒரு கோவிலின் முன்புறம் இறங்கினோம். இயக்குனருக்கு நாங்கள் காத்திருக்கும் இடத்தைத் தெரியப்படுத்தினோம். எங்களை அழைத்துச் செல்ல ஆள் அனுப்புவதாகக் கூறினார். சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் முகிலன் அவ்விடம் வந்தார். இதற்கு முன் பாத்திராத போதிலும் எங்களைக் கண்டு பிடிப்பதில் அவர் சிரமப்படவே இல்லை. நாங்கள் மூவரும் இயக்குனரின் அலுவலகத்தை நோக்கி நடையைக் கட்டினோம்.

அது பல அறைகளைக் கொண்ட சிறிய வீடு போல் காட்சியளித்தது. “பச்சை என்கிற காத்து” என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் ஆங்காங்கே காணப்பட்டன. கூடத்தைத் தாண்டி ஒரு சிறிய அறையை அடைந்தோம். அதுதான் இயக்குனரின் அலுவலகம். அங்கே இயக்குனர் கீரா அமர்ந்திருந்தார். “வாங்க” என எங்கள் இருவரையும் வரவேற்றார். “மன்னிக்கனும். சற்று நேரமாகிவிட்டது,” என்றேன். “என்னுடைய மனைவி இவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்திருந்து இப்பொழுதுதான் வீட்டிற்குச் சென்றார்,” என சற்று ஏமாற்றத்துடன் கூறினார். தாமதமாக வந்துவிட்டோமே என மனம் சற்று வருத்தப்பட்டது.

கீராவின் அறை மேசை மேல் ஒரு கணினி இருந்தது. அவரது இடப்புறத்தில் மடிக்கணினியோடு முகிலன் அமர்ந்துக்கொண்டார். எதிர்ப்புறம் இருந்த இரு நாற்காலிகளில் நானும் கவிதாவும் அமர்ந்துக் கொண்டோம். அந்த அறையின் சுவற்றில் புலி உருவ ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. ஒன்றும் வேண்டாம் என மறுத்தும் இரு குவளைகளில் பால் கலக்காத தேநீர் வரவழைக்கப்பட்டது. சற்று நேரம் அந்த அறையின் சூழலை நான் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். பல இலட்சம் பேர் கண்டு களிக்கும் திரைப்படத்தை இயக்கும் இயக்குனரின் அலுவலகம் இந்தச் சிறிய நான்குச் சுவர்கள்தானா என பரிதாபமாக இருந்தது.

இயக்குனரின் முகத்தில் ஏதோ ஒரு வகை சோகமும் இயலாமையும் படர்ந்திருந்தது. பல ஆண்டு கால கனவு! திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகும் வெளியிட முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருள் இருந்ததை உணர முடிந்தது. கதைக்கும் போது சில இடங்களில் அவரே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘பச்சை என்கிற காத்து’ திரைப்பட காட்சிகள் சிலவற்றையும், பாடல்களையும் போட்டுக் காட்டினார்.

4 கருத்துகள்:

indian சொன்னது…

//நுழைவாயிலில் இருந்த காவலாளிகள் எனது பையைத் திறக்கச் சொல்லி சோதனையிட்டனர். எதற்காக திரையரங்கில் இவ்வளவு சோதனை என எனக்கு சற்று வியப்பாக இருந்தது//

உங்களுக்கு வியப்பா தான் இருக்கும்! இது மாதிரி சோதனை முன்னாடியே நடந்திருந்தா ராஜீவ் காந்தியோட சேந்து அந்த 14 பேறும் செத்திருக்க மாட்டாங்க. மேலை நாடுகள்ல உக்காந்துகிட்டு உங்கள மாதிரி ஆளுக தீவிரவாதிகளுக்கு பணம் குடுக்கறதால தான் , எங்க நாட்ல இந்த நிலைமை! இது இவங்களுக்கு ரொம்ப வியப்பா இருக்காம்!!


//அங்கே பல நடைமேடைகள் (ப்பிளாட்பார்ம்) இருந்தன. எங்கு நான் காத்திருக்க வேண்டும் என குழப்பமாக இருந்தது. ஏற்கனவே இரண்டு பேரிடம் கேட்ட அனுபவம் இன்னும் கசந்துக் கொண்டிருந்தது.//

ஏங்க? உங்களுக்கு கண்ணும் காதும் இல்லையா? வெறும் வாய் மட்டும் தான் இருக்கா? எல்லா ரயில் நிலையங்களிலும் எந்த நடைமேடைல எந்த வண்டி வரும்னு தெளிவா எழுதி வச்சிருபாங்க. போதாகுறைக்கு அறிவிப்பு வேற பண்ணிட்டு இருப்பாங்க! அதுவும் இல்லையா முன்னாடியே ஒரு உதவி கவுன்ட்டர் இருக்கும். அதையெல்லாம் விட்டுட்டு யார் யார் கிட்டையோ போய் கேட்டா இப்படி தான் இருக்கும்!! அவங்களும் உங்கள மாதிரியே புதுசா அந்த ரயில் நிலையத்துக்கு வந்திருக்கலாம், இல்ல ஏதாவது அவசரத்துல இருக்கலாம்.
உங்க பயண கட்டுரை ரொம்பவே நல்லா தான் இருக்கு. படிக்கறவங்களுக்கு உங்களோடையே பயணிக்கற மாதிரி அனுபவம் குடுக்குது. ஆனா பல இடங்கள்ள ஏங்க எங்க நாட்டையும் நாட்டு மக்களையும் குறை சொல்லிட்டே இருக்கீங்க? எவ்ளோ தமிழ் படம் பாத்திருக்கீங்க? நாங்க அப்டி தான், எங்க ஊரு இப்படி தான்னு உங்களுக்கு முன்னமே தெரியாதா? புடிக்கலைன்னா அப்புறம் என்ன தேவைக்காக எங்க ஊருக்கு வந்தீங்க? வந்துட்டு அது நொட்டை, இது நொல்லைன்னு எதுக்கு சொல்றீங்க?


//அன்று மதியம் குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழுந்தில் மகிழ்ச்சியாக சத்யம் திரையரங்கிற்குச் சென்றோம்//

இதுவே உங்க இலங்கைல இப்படி போக முடியுமா? நீங்க தங்கி இருந்த இலங்கை குடும்பம் எங்க ஊர்ல சந்தோஷமா, செல்வா செழிப்போட தான இருக்கு? இத்தனை சுகத்தையும் அனுபவிச்சிட்டு எங்க ஊரையே குறை சொல்றது எப்படி தெரியுமா இருக்கு? பிச்சை எடுத்து நல்லா வயிறார சாப்ட்டுட்டு, பிச்சை போட்டவன் முகத்துல காரி துப்பர மாதிரி இருக்கு!

P.S: I am posting this under a generic name coz you already know me through blogs and I didn’t want to hurt you by giving my true identity. Whatever respect I had on you, slightly came down coz of your opinions about our country. But great travelogue! And I m not against your LTTE or any other org. that fights for tamil rights. I am only against blasting common people for what so ever reason it may be. You people fume that your brothers n sisters got killed for no reason and to take revenge on one particular person, you do the same to others’ brothers and sisters who are in no way related to your tragedy! And on top of it, you call this act as freedom struggle!! That’s really strange!

senthil சொன்னது…

//மேலை நாடுகள்ல உக்காந்துகிட்டு உங்கள மாதிரி ஆளுக தீவிரவாதிகளுக்கு பணம் குடுக்கறதால தான் , எங்க நாட்ல இந்த நிலைமை!// முடிந்த இலங்கை போரில் நடந்த போர்க்குற்ற்ங்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டு அரசாங்கம் ஒன்றும் சொல்லவில்லையே. அப்படியென்றால் உங்கள் நாடு போர்க்குற்றத்தை ஆதரிக்கின்றது என அர்த்தமா?அல்ல அவர்களும் உடந்தையா? இவ்வாறு நான் கூறினால் நீர் எவ்வாறு வருத்தமடைவீரோ அவ்வாறே எமக்கும் இருக்கின்றது. வார்த்தைகளில் கவனம் தேவை நண்பரே.

senthil சொன்னது…

//பல இடங்கள்ள ஏங்க எங்க நாட்டையும் நாட்டு மக்களையும் குறை சொல்லிட்டே இருக்கீங்க? எவ்ளோ தமிழ் படம் பாத்திருக்கீங்க? நாங்க அப்டி தான், எங்க ஊரு இப்படி தான்னு உங்களுக்கு முன்னமே தெரியாதா? புடிக்கலைன்னா அப்புறம் என்ன தேவைக்காக எங்க ஊருக்கு வந்தீங்க? // நான் படித்த வரை இவர் எழுத்துகளில் குறையை மட்டுமே குறிப்பிடவில்லை. நிறைகளை பல இடங்களில் செம்மையாகச் சுட்டியுள்ளார். சோழனின் கோயிலை வர்ணிக்கும் போதும், இயற்கை எழிலைச் சொல்லும் போதும், ஏன்.. குழந்தைக்குப் இரயில் நிலையத்தில் பாலூட்டும் போதும் அழகிய, நிறைகளைச் சுட்டும் வர்ணனை வெளிப்படவில்லையா...? நாங்கள் இப்படித்தான் என்பது அறிவீனம் அன்றோ. புதியவர் ஒருவர் தடுமாறுகையில் உதவுவது பண்பு. நமக்குத் தெரியாவிடில் மன்னிப்பு கோரி தெரியாது எனச் சொல்லிவிடலாம். அதை விடுத்து பதில் கூறாமல் போவது சரியில்லையே.

senthil சொன்னது…

//இத்தனை சுகத்தையும் அனுபவிச்சிட்டு எங்க ஊரையே குறை சொல்றது எப்படி தெரியுமா இருக்கு? பிச்சை எடுத்து நல்லா வயிறார சாப்ட்டுட்டு, பிச்சை போட்டவன் முகத்துல காரி துப்பர மாதிரி இருக்கு// ஏன் சுகத்தை அனுபவித்தால் குறைகளைச் சுட்ட கூடாதா? கண்டும் காணாது செல்ல வேண்டுமா? என்ன பிதற்றுகிறீர்?? எங்கு இருந்தாலும் குறைகளைக் காணும் போது எடுத்து கூறுவதே நன்று.மேலும் தாங்கள் கூறும் உதாரணம் சற்று கடுமையாக, நாகரிகமற்று இருக்கின்றது. பொதுவில் பேசும் போது நாகரிகமாய் பேசுதல் மிகவும் அவசியம் அன்பரே. இவ்வாறு நீர் எழுதும் போது படிப்போர் மனதில் தவறனா எண்ணமே எழும்.