வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தூக்கினை இரத்து செய்!



எமது சகோதரர்களுக்குத் தூக்கு
அதைத் தடுக்க முடியாமல் நான்…
தமிழகத்தில் அவர்கள்
நானோ எங்கோ ஓர் மூலையில் …
என்னையும் இந்தியன் என்கிறார்களே
நான் இந்தியா வரத் தடை ஏன்?
போராட்டக் களத்தில் தோழர்கள்
அலுவலக வேலைகளில் நான்!

ச்சே என்ன வாழ்க்கையடா இது!
மயிர் போனால் முளைக்கும்
அவர்கள் உயிர் போனால் வருமா?
ஏழு நாட்கள் தானே உள்ளது?
என்ன செய்யலாம், ஏது செய்யலாம்
ஒன்றுமே தெரியவில்லையே?

அம்மா முதல்வரே,
கருணை காட்டுவாயா?
உயிர்ப்பிச்சை போடுவாயா?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்
நிரபராதிகளைத் தண்டிப்பது தகுமா?
கொலையாளி யாரென்றே தெரியாமல்
அப்பாவிகளைப் பலியாக்கலாமா?

அவர்களைக் கொல்லாதீர்கள்!
வாழ்வில் பாதிநாட்கள் முடிந்துவிட்டன
சிறைச்சாலை அவற்றைத் தின்றுவிட்டது
மீதி நாட்களாவது  வாழ விடுங்கள்!
சுதந்திரக் காற்றை அவர்களும் சுவாசிக்கட்டுமே?

நீதி தேவதையே,
நீதியற்ற தீர்ப்புகள் அரங்கேறும்
அப்பாவிகள் கொல்லப்படுவார்கள்
தமிழர்கள் கண்ணீர்விடுவார்கள்
இந்த அவலத்தைப் பார்க்கக்கூடாது - என்று
உன் கண்களைக் கட்டிக்கொண்டாயா?

செய்யாத கொலைக்குத் தூக்கு தண்டனையா?
போனது ஓர் உயிர்தானே
அதற்கு பலியானது இலட்சம் உயிர்கள்
அதுவும் போதாதா? இன்னும் வேண்டுமா?
இந்த மூன்று உயிர்களைப் பலிகொண்டுதான்
உன் நீதியை நிலைநாட்ட வேண்டுமா?

பிரதமர் உயிர் என்றால் பெரிதா
எம் தமிழன் உயிர் என்ன சிறிதா?
நினைத்தாலே பதறுது மனசே
தூக்கினை இரத்து செய் அரசே!

மனுக்கள் கொடுத்தோம்
கெஞ்சிப் பார்த்தோம் –நீதி
வேண்டி அலைந்துத் திரிந்தோம்
மேடைப் போட்டு கத்துகின்றோம்
உண்ணாவிரதம் ஆரம்பித்தோம்!

இரக்கமே இல்லாமல்
எதற்குமே அசையாமல்
தன்னிச்சையாய் நீ செயல்பட்டால்
சிறைச்சாலை புகுந்து –எம்
தமிழரை மீட்டெடுப்போம்!
அவர் உயிரைக் காத்திடுவோம்!

கருத்துகள் இல்லை: