சனி, 27 ஜூலை, 2013

புழலில் ஒரு நாள் (1)

 
 வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதத்தின் போது, தமிழீழ கொடியினை ஆடையாக தரித்து வந்த சிறுவர்கள்

மார்ச் 2013  தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் எழுச்சிப்பெற்று நடந்துக்கொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது; இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்; ஆசிய நாடுகள் சர்வதேசிய விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது; இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்து லயோலா கல்லூரி மாணவர்கள் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.  லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரால் மூட்டப்பட்ட இத்தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத்தீ போல் பரவிய காலகட்டம். தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இம்மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக வாழ் ஈழ அகதிகள் மார்ச் 22-ஆம் திகதி அன்று ஒன்று திரண்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டத்தின் அருகே மேற்கொண்டனர். அதே நாளன்று 'புழல்' அகதிகள் முகாமிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.  முதல் நாள் இரவே கேணல் கிட்டுவின் மாமியார் அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு விபரம் கூறியிருந்தபடியால், அன்று காலையிலேயே வள்ளுவர் கோட்டத்திற்குக் கிளம்பிவிட்டேன். வீட்டைவிட்டு புறப்படும் போதே, "இன்டைக்கும் உண்ணாவிரதமா?" என அம்மா கவலையுடன் கேட்டார். சிரித்துவிட்டு, "இரவுக்குள் வந்துவிடுவேன்" என சமாதானம் கூறினேன். கடந்த சில நாட்களாகவே மாணவர் போராட்டம், உண்ணாவிரதம் என அடிக்கடி வெளியில் சென்று விடுவதால் அந்தத் தாயின் உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. போகும் இடங்களில் கைது நடவடிக்கைகள் இருப்பதாலும் , என்னுடைய தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததாலும் அம்மா கொஞ்சம் பயப்படவும் செய்தார். எம்மை சுமந்து பெறா தாயாக இருந்த போதிலும், பெற்றப் பிள்ளைப் போல் எம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அந்த ஈழத்துத் தாயின் பாசம் எம்மை நெகிழ வைத்தது.
அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழ ஆதரவாள திரையுலக பிரபலங்கள்

வாடகை வண்டியில் வள்ளுவர் கோட்டம் சென்றடைந்தேன். மிகப்பெரிய கூடாரம் அமைத்து ஈழத்தமிழர்கள் பலர் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இயக்குனர் சேரன், தேனிசைத் தென்றல் செல்லப்பா, மைசூர் அலிகான், இயக்குனர் களஞ்சியம் ஆகியோருடன் இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அவ்விடம் கூடியிருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. பிற்பகல் வரை அவர்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தேன். உண்ணாவிரதப் பந்தலில் நெற்பயிரோடு கலந்திருக்கும் களை போல சில துரோகிகளும் கலந்திருக்கக் கண்டேன். "உங்களை இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஒதுங்கியிருந்தீர்களே?" என ஒருவன் அவனாகவே வந்து கேட்டது எரிச்சலூட்டியது. நெஞ்சம் படபடத்தது. "அடப்பாவிகளா? இங்கேயும் கலந்துவிட்டீர்களா" என மனம் கதறியது. ஒரு புன்னகையோடு விலக முற்பட்டேன். வேண்டுமென்றே போராட்டங்களிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ள காரணமாக இருந்த சம்பவங்களை அவனாகவே நினைவூட்டினான்.

அதற்கு மேலும் அவ்விடம் இருக்க மனம் விரும்பவில்லை.  அதற்குள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய  மாணவர்கள் அவ்விடம் வர, அவர்களோடு புழல் நோக்கிச் சென்றேன். தமிழ்நாட்டில் புழல் சிறை பிரபலமானது. அதனை அடுத்து புழல் அகதிகள் முகாம். இவ்விரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில், ஈழத்து அகதிகளை இடம் பற்றாக்குறைக் காரணமாக புழல் சிறையின் உள்ளேதான் வைத்திருந்தார்களாம். பின்னர்தான் அதன் அருகாமையிலேயே அகதிகள் முகாம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் என பெரியவர் ஒருவர் கூறி அறியப்பெற்றேன்.
புழல் அகதிகள் முகாமில் நடைப்பெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர்கள்

மிகவும் குறுகலான செம்மண் சாலை. சிறைக்கதவுகள் போன்று பெரிய வாயிற்கதவுகள் அதனைத் தாண்டிய அடுத்த நொடியே புழல் அகதிகள் முகாமின் எல்லை ஆரம்பமாகிறது. காலையிலேயே உண்ணாவிரதம் தொடங்கிவிட்டதால், முகாமிலுள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இவ்விடம் பெரும்பான்மை பெண்களும் குழந்தைகளுமே கண்ணில் பட்டனர். மிக நீண்ட உண்ணாவிரதப் பந்தலின் கடைசியில் சில ஆண்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஈழத்தமிழர் ஒருவர் உணர்ச்சிப்பொங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும் வேளையில் தாங்க மாட்டாமல் அவரது கண்கள் பனித்துவிட்டன. நாம் அறிந்த, அறிந்திராத சில திடுக்கிடும் விடயங்களை அவர் அன்று அனைவர் மத்தியிலும் பகிர்ந்துக்கொண்டார்.

தமிழ்ப்பெண்களின் மார்பை அறுத்து, "தமிழச்சிகளின் மார்பு கறி இங்கே கிடைக்கும்" என்று எழுதிப்போட்ட சிங்கள வெறிநாய்களின் அராஜகத்தைச் சொன்னார். போர் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம் என்று பொய்யுரைத்து, சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்து வெடி வைத்துக் கொன்ற சிங்களவனின் வெறிச்செயலைச் சொன்னார். இன்னும் என்னென்னவோ சொன்னார். நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களைச் சொன்னார். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சட்டப் பல்கலைக்கழக மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது. அந்தத் தெலுங்கு மாணவி தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் எம்மையும் உருக்கியது.
 
***தொடரும்***

வெள்ளி, 26 ஜூலை, 2013

அன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 3)



பாட்டிக்குக் கயல்விழி மீது கோபம் வரும் போதெல்லாம், "சனியன், அம்மாவைப் போலவே புத்தி," என திட்டும் போது கயல் நிஜமாகவே நொறுங்கிவிடுவாள். அவள் தாய் எத்தகைய புத்திக் கொண்டவள் என்று அவளுக்கு எப்படித் தெரியும்? என்றாவது ஒருநாள் தன் தாய் தன்னை அவளோடு அழைத்துச் செல்லமாட்டாளா என்று ஏங்க தொடங்கினாள். ஏக்கத்தின் ஊடே வளர்ந்துப் படித்தாள். பல போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளிக்குவித்தாள். அவள் கொண்டு வரும் பரிசுகளைப் பாட்டியின் கண்களில் படுமாறு வரவேற்பறையில் வைத்துவிட்டு அமைதியாக தன் அறைக்குள் சென்றுவிடுவாள். எதற்காக பரிசு கிடைத்தது என்று தெரியாமலேயே பாட்டி அதனைத் தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் பெருமை பாராட்டச் சென்றுவிடுவாள். கயல்விழியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கல்யாணிதான் பாட்டிக்கு விபரம் சொல்வாள்.

6-ஆம் ஆண்டுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்று பள்ளியிலேயே சிறந்த மாணவிக்கான விருதினைத் தட்டிச் சென்றாள். அந்த விருதினை கயல்விழியின் சார்பாக அவளது பாட்டித்தான் பெற்றுக்கொண்டாள். பாட்டிக்குப் பேத்தி மீது அன்புதான். ஆனால், கயல்விழிக்கோ யார் மீதும் பிடிப்பு இல்லை. சொல்லாத சோகத்தை கண்ணோடும் , பாரத்தை நெஞ்சோடும் சுமந்து வந்தாள். யாரோடும் அவள் பிடி கொடுத்தும் பேசுவது இல்லை. அனாவசிய பேச்சுகளை அறவே தவிர்த்தாள். இதனாலேயே அவளுக்குச் 'சிடுமூஞ்சி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயரே அவளுக்குப் பாதுகாப்பாகவும் விளங்கியது. பாட்டிதான் அவளைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள்.  எந்நேரமும் சிடுசிடுவென இருக்கும் கயல்விழியின் மேல் பாட்டிக்கு எரிச்சல் கூட வந்தது.

காலங்கள் உருண்டோடி கயல்விழி பருவம் எய்தினாள். அப்போதுதான் தனது வாழ்நாளில் கொடிய அனுபவங்களை அவள் சந்தித்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை;பாட்டி எதையும் விளக்கவில்லை. தாயின் நினைவுகளே அவளைக் கல்லாக மாற்றியது. பாட்டியின் அன்பு புரிந்தாலும் அதனை முழுமையாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னைத் தாயிடமிருந்து பிரித்தவள் தானே இவள் என்ற எண்ணம் இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது. அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாள். பாட்டிக்கு அதுவும் தெரியவில்லை. தனது சிடுமூஞ்சிப் பேத்தியை அவளால் வெறுக்கவும் முடியவில்லை.

கயல்விழி படித்து முடித்து வேலைக்குச் செல்ல தொடங்கினாள். பாட்டியை விட்டு நெடுந்தூரம் பிரிந்து, தனியாக வசித்து வந்தாள். இன்று அவளுக்குச் செய்தி வந்தது... பாட்டி ஆபத்தான கட்டத்தில் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். கயலுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது. தான் எவ்வளவு தான் சிடுசிடுவென இருந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தாமல் அன்பு செலுத்தும் பாட்டி இப்போது சுயநினைவோடு இல்லை. என்ன செய்வாள் இந்த சிடுமூஞ்சி பேத்தி? சென்று அமைதியாக பார்த்தாள்....வழக்கம் போல தனியாகக் கதறுகிறாள்....

***முற்றும்***

ஞாயிறு, 14 ஜூலை, 2013

எழுத்தாளராகப் பாருங்கள்!



எழுத்தாளராக பாருங்கள்
எம்மை எழுத்தாளராக மட்டும் பாருங்கள்
எம் அவயங்களைப் பார்க்காதீர்
எம் பின்னனியைப் பார்க்காதீர்
எம் பாலினத்தைப் பார்க்காதீர்
எம்மைப் பெண்ணாகப் பார்க்காதீர்!

பெண்ணுறுப்பு இருப்பதனால்
பெருந்தன்மைக் காட்ட வேண்டாம்
வளைவுகள் இருப்பதனால்
விருதுகள் கொடுக்க வேண்டாம்
விரிந்த இலக்கியத்தில்
வித்தியாசம் கொள்ள வேண்டாம்!

மருமகன் என்பவன்
மறுவீடு செல்வதில்லை
தாய்வீட்டில் இருப்பதனால்
மாமியார் சண்டை இல்லை!
மருமகள் என்பவள்
புகுவீடு செல்வதனால்
புதிய இடம் என்பதனால்
பிரச்சனையில் வியப்பில்லை
பலருக்கு இது புரிவதில்லை!

எழுத்தாளரைப் பெண்ணாக்கி
பெண்ணை மருமகளாக்கி
அவளைப் பிரச்சனையாக்கி
பெருவிழாவில் பேசுகின்றீர்
'பெருந்தன்மை' காட்டுகின்றீர்!
பேனாவைப் பிடித்துக்கொண்டு
'பெண்ணாக' அமர்ந்துக்கொண்டு
எழுத்தாளர் பார்க்கின்றார்
கைத்தட்டி இரசிக்கின்றார்!

எப்போது வருந்துவார்?
எப்போது திருந்துவார்?
பெண் என்பவள் மனிதன் என்று
எப்போது உணருவார்?

பிரித்துப் பார்க்காதீர்
பாகுபாடு கொள்ளாதீர்
பரந்த இலக்கியத்தில்
பெண்னென்று ஒதுக்காதீர்!
படைப்பு என்று வந்தால்
படைப்பாளி ஒருவர்தான்
பாகுபாடு காட்டிவிட்டு
பெருந்தன்மைக் கொள்ளாதீர்!

எம்மை எழுத்தாளராகப் பாருங்கள்
எழுத்தாளராக மட்டும் பாருங்கள்!

வெள்ளி, 21 ஜூன், 2013

குடும்பம் எங்கே?


தந்தை உண்டு
பெயருக்கு பின்னால்
தாய் உண்டு ‍‍‍‍‍‍நான்
பிறந்ததற்கு அறிகுறியாய்
சொந்தங்கள் உண்டு
எடுத்தெம்மை வளர்த்ததினால்
ஆனால், என் குடும்பம் எங்கே?

அன்புள்ள பாட்டியும் சிடுமூஞ்சி பேத்தியும் (பாகம் 2)


அவள் தேடிய உறவு கடைசி வரை வரவே வராது என்பதை அவள் உணரவில்லை. பள்ளியில் புத்தகத்தில் இருக்கும் எண்களும் எழுத்துக்களும் அவளுக்கு பயம் காட்டின. அவள் பாலர் பள்ளிக்குச் செல்லாத காரணத்தினால் ஒன்றாம் வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களைக் காட்டிலும் பின் தங்கியிருந்தாள். அவளது முகத்தைப் பார்த்து, 'இந்தப் பிள்ளை நன்றாய் படிப்பாள்' என தப்புக்கணக்குப் போட்ட ஆசிரியை மாணவர்களைக் குழு வாரியாகப் பிரித்து அவளை முதல் குழுவில் சேர்த்திருந்தாள். 'அம்மா' என்ற சொல்லைக் கூட படிக்கத் தெரியாமல் திணறிய போது அந்தப் பிஞ்சுக் கரங்களை மூங்கில் கம்பு முதன் முறையாகப் பதம் பார்த்தது.


அவளுக்கு அவமானமாய் இருந்தது. அழுகை வந்தது. எதுவும் விளங்கவில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. தனது எழுதுகோல் பெட்டிக்குள் ஏதோவொரு நாள்காட்டியிருந்து வெட்டி எடுத்த 'சரஸ்வதி' படம் இருந்தது. அதனைக் கையில் ஏந்திக்கொண்டு பார்த்து பார்த்து அழுதாள். தனது தாயே நேரில் தன் குறைகளைக் கேட்பது போல் பாவனை செய்து மனதிற்குள்ளேயே புலம்பினாள். வெள்ளித்தாமரையில் வீணையுடன் வீற்றிருந்த அந்தத் தாய் அவளதுக் குறைகளைக் காது கொடுத்து கேட்கிறாளா என்பது கூட அவளுக்குத் தெரியாது.


அவள் அவ்வாறு படத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்க, பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுமி ஒருத்தி அதனைச் சட்டென்று பிடுங்கி, "டீச்சர், கயல்விழி இந்தப் படத்தைப் பார்த்து பார்த்து அழறா" என்று ஆசிரியரிடம் அதனை நீட்டினாள். கயல்விழி! ஆம், அதுதான் நமது கதாநாயகியின் பெயர். கயலைப் போன்ற விழிகள் கொண்டவள். கறுப்பு நிறம், சுருண்ட கேசம், சிங்கப்பற்கள், பெரிய மூக்கு! அதுதான் அவளின் அடையாளம். சீத்தா ஆசிரியர் கயல்விழியை உற்று நோக்கினார். அவர் பார்வை மாறியிருந்தது. 'இந்தப் படம் உனக்கு யார் கொடுத்தா?" என்ற கேள்விக்கு அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.


"நாளைக்கு உன் அம்மாவை பள்ளிக்கு வரச்சொல்."


"பாட்டிதான் இருக்காக்க."


"அம்மா எங்கே?"


"தெரியாது." அழுகை நின்றபாடில்லை.


ஆசிரியருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கயல்விழியை இரண்டாம் குழுவிற்கு மாற்றிவிட்ட பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்பதில்லை. கயல் அன்று முழுவதும் சோகமாக இருந்தாள். தன் தாய் இருந்திருந்தால் நிச்சயம் பாலர் பள்ளிக்குத் தன்னை அனுப்பியிருப்பாள். ஒன்றும் படிக்கத் தெரியாமல் தான் இன்றைக்கு அடிவாங்கியிருக்க நேர்ந்திருக்காது என வருந்தினாள். அவள் அடி வாங்கிய விடயத்தை ஒருவரிடமும் சொல்லவில்லை. வகுப்பில் இரண்டாவது குழுவில் இருந்தும் அவள் மூன்றாம் தர மாணவியாகவே இருந்துவந்தாள்.


அடுத்ததாக மலாய் படிக்கத் தெரியாத காரணத்தினால் மலாய் ஆசிரியர் ஒருவரிடம் கிள்ளு வாங்கினாள். அவள் அழும்போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் அளித்தது அவளிடம் இருந்த சரஸ்வதி படம் ஒன்று மட்டுமே. சக மாணவர்களுடன் அவள் அதிகம் சேர்வதில்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் பற்றி பெருமையாகப் பேசும் போது பாவி இவள் என்ன செய்வாள்? பிஞ்சிலேயே கயல் தனிமையை நாடினாள். அதன் காரணமாக பாட்டியிடமும் அவள் சரியாகப் பேசுவதில்லை.


மற்றவர்கள் மெத்தையில் படுக்க, தம்மை பாட்டி தரையில் பாய் விரித்து படுக்க வைத்த போது அவள் தனிமையை உணர்ந்தாள். தன் வயதையொத்த பிள்ளைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்கையில், தனக்கு மட்டும் அத்தைமார்கள் பிடிக்காமல் தூக்கி எறியும் துணிகளை மாட்டிவிட்டதில் அவளுக்கு உடன்பாடில்லை. பக்கத்து வீட்டு கல்யாணிக்கு இன்னமும் அவள் அம்மாதான் சோறூட்டிவிடுகிறாள். இவளோ ஏழு வயதிலேயே சட்டையைத் தானே 'அயர்ன்' செய்யவும், பள்ளிக் காலணியைத் துவைக்கவும் பழகியிருந்தாள். கயல்விழி வளர வளர அவளுள்ளே ஏங்கங்களும் தனிமையின் தாக்கங்களும் வளர்ந்துக்கொண்டே வந்தன.


பாட்டி அவளை பாசமாகவே பார்த்துக்கொண்டாள். தாயின் அன்பினை பாட்டியின் அன்பு ஈடு செய்ய முடியாது என்பதை அவள் உணரவில்லை. இரண்டாம் வகுப்புச் செல்லும் வேளையில் கயல் தம்மை 'டியூசன்' எனப்படும் துணை வகுப்பு அனுப்புமாறு பாட்டியிடம் கேட்டாள். இரண்டு மாதங்கள் சென்றும் வந்தாள். மூன்றாம் மாதம் தம்மால் பணம் செலுத்த முடியாது என்று பாட்டி அவளை துணை வகுப்பிலிருந்து நிறுத்திவிட்டார். பாவம் பாட்டி. கருமியான தாத்தாவிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டு சண்டையிட்டே அவளது குடும்ப வாழ்க்கை கசந்து போனது. எது எப்படியிருந்தும் இதில் பாதிக்கப்பட்டது கயல்விழி! அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. அழுதாள்...எப்பொழுதும் போல் சரஸ்வதி தேவியிடம் புலம்பித் தீர்த்தாள்.


மூன்றாம் வகுப்பிற்குச் செல்லும் போது அவளுள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தானாக முயற்சி செய்து படிக்கக் கற்றுக்கொண்டாள். பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் அனைத்திலும் கலந்துக்கொண்டாள். வீட்டிற்கு வந்த பிறகும் எதையாவது படித்துக்கொண்டே இருந்தாள். ஆரம்பத்தில் பாட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய உதவியாக இருந்தாள். காய்கறி நறுக்குவதிலிருந்து, வீடு பெருக்குவது வரை அனைத்தையும் செய்து வந்தாள். ஆனால், அந்தக் கூட்டுக் குடும்பத்தில் மற்ற பிள்ளைகள் ஒன்றும் செய்யாமல் இருக்க, தம்மை மட்டும் அத்தைமார்களும் சித்தப்பா பெரியப்பாமார்களும் கூப்பிட்டு கூப்பிட்டு வேலை கொடுத்தது அவளை என்னவோ செய்தது.


வெளியூரிலிருந்து வரும் அத்தையின் துணிப்பைகளை வண்டியிலிருது இறக்குவதிலிருந்து, அவர்கள் கேட்கும் சிறு சிறு பொருட்களைக் கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்த போதும், ஏதோ ஒன்று அவள் நெஞ்சைக் குத்திக்கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் வெளியில் செல்லும் போது, வாகனத்தில் இடம் பற்றவில்லை என்று நொண்டிச்சாக்குச் சொல்லி அவளை மட்டும் தனியே விட்டுச் சென்ற மாமாவின் வஞ்சகம் அவளை அரித்துக்கொண்டுதான் இருந்தது. பழவகைகளும் சாப்பாட்டு வகைகளும் அளவாக இருக்கும் வேளையில், "கயல் இதெல்லாம் சாப்பிடமாட்டா. நீங்க எடுத்துக்கோங்க, " என பாட்டி முந்திக்கொண்டுச் சொல்லி தமது ஆசையில் மண் அள்ளிப் போட்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.


தனக்கு அங்கு எதுவும்/எவரும் சொந்தமில்லை என்ற எண்ணம் அவளுள் அடிக்கடி எழுந்தது. விளைவு? அவள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அளவோடு சிரிப்பாள். அதிகம் படிப்பாள்.


இப்பொழுதெல்லாம் அவள் எதற்கும் ஆசைப்படுவது இல்லை. வீட்டிற்கு உறவினர்கள் வந்தார்கள் என்றால், தனக்குப் புறப்பாட நடவடிக்கை என்று சொல்லி பள்ளிக்குச் சென்றுவிடுவாள். அதன் காரணமாகவே பள்ளி போட்டி விளையாட்டுக்கள் அனைத்திலும் கலந்துக்கொண்டு தன் கவனத்தை திசை திருப்பக் கற்றுக்கொண்டாள். வீட்டில் யாவரும் வெளியே செல்ல ஆயத்தமானால் தனக்குப் பாடம் இருக்கிறது வர இயலாது என்று இவளாக முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறாள். வீட்டில் புதுவகை உணவுகள் இருப்பின், "இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்," என்று பொய் சொல்ல பழகியிருந்தாள். பசித்தாலும் பசிக்கவில்லை என்பாள். சின்ன வயதிலேயே அவள் சுயகட்டுப்பாட்டினை ஏற்படுத்துக் கொண்டாள். அந்தப் பிஞ்சி மனசில் ஏற்பட்ட காயங்களைப் பாட்டி அறிந்திருக்கவில்லை.


....தொடரும்.....

வியாழன், 20 ஜூன், 2013

போராட்டம் வெல்லும்!



தம்பிகளே
மெழுகுவர்த்தியாய் உங்களையே உருக்குகின்றீர்
அதன் வெளிச்சத்தில் சில குள்ளநரிகள்
குளிர்காய முயல்கின்றன!


*****
எச்சரிக்கை!
எதிரி நமக்குள்ளே இருக்கிறான்
இனிக்க இனிக்க கதைக்கிறான்
கனவினை குழியினில் புதைக்கிறான்!


*****
சோர்ந்துவிடாதீர்
நம்பிக்கை இழக்காதீர்
உலகத் தமிழர் உன் பக்கம்
இதனை மட்டும் மறக்காதீர்!


*****
நாளை வரும் நல்வேளை வரும்
பேச்சுவார்த்தைக்கு ஆளும் வரும்
காலம் வரும் நல்ல காலம் வரும்
நம் கோரிக்கை யாவும் ஏற்கப்படும்!


*****


தங்கபாலு வந்ததில் தள்ளும் முள்ளும்
வெறுப்பினில் எறிந்தது செருப்பும் கல்லும்
நல்ல மானுடக்கழகு பல்லும் சொல்லும்-நம்
போராட்டம் இனி நிச்சயம் வெல்லும்!

வெங்காய வாழ்க்கை!


வாழ்க்கை ஒரு வெங்காயம்
உரித்து உரித்துப் பார்க்கிறேன்
கண்ணீரைத் தவிர ஒன்றுமில்லை!